ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

இது உங்களுக்கு கடைசி வார்னிங்

 Tamilnadu news in tamil: Former Minister CV Shanmugam talks about BJP and gets trolls

பேரறிஞர் அண்ணா குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில் திராவிட கழகத்தினர், அ.தி.மு.க வினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் சென்னையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், தலைவர் பேரறிஞர் அண்ணா குறித்துப் பேசிய சில கருத்துகள் சர்ச்சையானது.  இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி. வி.சண்முகம் எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், "பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை, நீயும் இல்லை நானும் இல்லை, இந்த ஆறு சதவீதம் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். மீதம் உள்ள 93 சதவீதம் பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிறபடுத்தப்பப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக வாழ்ந்திருப்பார்கள், சலவைத் தொழிலாளர்களாக, ரிக்‌ஷா  தொழிலாளராக இன்றும் நாம் வாழ்ந்திருப்போம். இன்றைக்கு  இந்தியாவிலேயே தமிழகம் முன்னேறிய மாநிலம். படிப்பிலும் சரி, தொழில் வளர்ச்சியிலும். இந்த வசதிகளுக்கும் இந்த வளர்ச்சியையும் காரணம் பேரறிஞர் அண்ணா. 

ஆனால் இந்த சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்து பேசி உள்ளார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசி உள்ளார். இன்றைக்கு விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. அண்ணாமலை சொல்லும் சம்பவம் 1951இல் மதுரையில் அண்ணா பேசியதாக ஒரு சம்பவத்தை கூறுகிறீர்கள்.

அந்த சம்பவத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எந்த அடிப்படையும் இல்லை. வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ, உங்களை நீங்க அறிவு  ஜீவியாக நினைத்துக்கொண்டு எல்லாம் தெரியும் என பேசிய உள்ளீர்கள். அந்த சம்பவம் நடந்து 74 ஆண்டுகள் ஆகிறது, உங்கள் வயது 40. அப்போது உங்களுடைய அப்பா அம்மாவுக்கு திருமணம் கூட ஆகி இருக்காது. 

 அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என அவருடைய தேசிய தலைமை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு வரவழைத்து அருகிலேயே அமர வைத்து பேசுகிறார். என்டிஏ  கூட்டணிகளில் பாஜகவிற்கு அடுத்து உள்ள மிகப்பெரிய கட்சி அதிமுக, இதனை தேசிய தலைவர்கள் புரிந்துள்ளார்கள். ஜேபி நட்டா, மோடி, அமித்ஷா ஆகியோருக்கு அதிமுகவின் அருமை தெரிந்துள்ளது. 

ஏன் உங்களுக்கு தெரியவில்லையா, கண்ணு தெரியவில்லையா காது கேட்கவில்லையா. கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவின் பெயரில் இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சிப்பதா.?  2 கோடி தொண்டர்களின் தெய்வம், அண்ணாவை தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள், அண்ணாமலைக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இனியும் இந்த போக்கு நீடித்தால், எங்கள் அம்மாவை விமர்சனம் செய்தார் இன்றைக்கு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்துள்ளார். 

அண்ணாமலையின் செயல்பாடு கூட்டணி தர்மத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும்.  தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என அண்ணாமலை திட்டமோ என சந்தேகம். தி.மு.க உடன் கைகோர்த்து அண்ணாமலை செயல்பாடு. அண்ணாமலை செல்வது பாதயாத்திரையா, வசூல் யாத்திரையா எனத் தெரியவில்லை. தன்னுடைய இருப்பைக் காட்ட இதுபோல் செயல்படுகிறார்.  அண்ணாமலை இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. இனியும் தொடர்ந்தால் அ.தி.மு.க தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று பேசினார். 


sourcd https://tamil.indianexpress.com/tamilnadu/admk-cv-shanmugam-slams-bjp-annamalai-over-comment-on-anna-1348282