வெள்ளி, 22 செப்டம்பர், 2023

தீவிரமடையும் ராஜதந்திர பிரச்னைகள்; கனடாவில் விசா சேவைகளை நிறுத்திய இந்தியா

 21 09 23

கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு "இந்திய-விரோத நடவடிக்கைகள்" மற்றும் "அரசியல் ரீதியாக மன்னிக்கப்படும் வெறுப்புக் குற்றங்களுக்கு" எதிராக எச்சரிக்கும் கடுமையான வார்த்தைகளுடன் கூடிய அறிவுறுத்தல்களை வழங்கிய ஒரு நாள் கழித்து, இந்தியா வியாழக்கிழமை அந்த நாட்டில் விசா சேவைகளை நிறுத்தியது.

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் விசா வசதி இணையதளத்தின் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் "இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கும்" இடையே "சாத்தியமான தொடர்பு" இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. மூத்த இந்திய இராஜதந்திரியை கனடா வெளியேற்றிய நிலையில்இந்தியா செவ்வாய்க்கிழமை பதிலடி கொடுத்து மூத்த கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

புதன்கிழமைவெளியுறவு அமைச்சகம் (MEA) தனது பயண ஆலோசனையில், கனடா நாட்டில் “இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியாக மன்னிக்கப்படும் வெறுப்புக் குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, கனடாவில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் மற்றும் அங்கு செல்ல விரும்புபவர்களும் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

"சமீபத்தில்அச்சுறுத்தல்கள் குறிப்பாக இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய விரோத போக்கை எதிர்க்கும் இந்திய சமூகத்தின் பிரிவுகளை குறிவைத்துள்ளன... எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்த கனடாவில் உள்ள பகுதிகள் மற்றும் சாத்தியமான இடங்களுக்கு இந்திய குடிமக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அறிக்கை கூறியது.

கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் கனடா அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களில் அந்தந்த இணையதளங்கள் அல்லது MADAD போர்டல், madad.gov.in மூலம் பதிவு செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/after-travel-advisory-india-stops-visa-services-in-canada-amid-escalating-diplomatic-row-1378796