ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

கனடாவை ஆதரித்து பேசும் அமெரிக்க தூதர்!!

 

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தலையீடு உள்ளதை கனடா பிரதமர் ட்ரூடோ தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படுத்தியதாக அமெரிக்க தூதர் கோஹென் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ‘ஃபைவ் ஐஸ்’ கூட்டமைப்பிடமிருந்து கிடைத்த உளவு தகவல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தியா மீது ட்ரூடோ குற்றஞ்சாட்டியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து ஒளிபரப்பாகும் ‘சிடிவி’ செய்திச் சேனல் வெளியிட்ட செய்தி மூலமாக இந்திய உளவாளிகளின் தலையீடு உள்ளது தெரியவந்துள்ளதாக கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹென் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிடிவி சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும், கனடா பிரதமர் இந்தியா மீது கூறும் குற்றச்சாட்டை தான் உறுதிப்படுத்துவதாகவும் கோஹென் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கனடாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து உளவுத் தகவல் பகிர்தல் கூட்டுறவின் அடிப்படையில் கிடைத்த கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை ட்ரூடோ முன்வைத்திருப்பதாக கனடா ஒளிபரப்பு கழகம் மற்றும் தி அசோசியேட்டட் பிரஸ் ஆகியவையும் செய்தி வெளியிட்டருப்பதாகவும் சிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 09 2023 


source https://news7tamil.live/indias-involvement-in-nijjars-murder-us-ambassador-speaks-in-support-of-canada.html