21 09 2023
Rahul-gandhi | delhi: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) கிழக்கு டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பணி செய்யும் போர்ட்டர்களை (ரயில்வே கூலி) சந்தித்து உரையாடினார். அப்போது அவர்கள் கொடுத்த சிவப்பு சீருடை மற்றும் பேட்ஜை அணிந்துகொண்டு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அவர் நடந்து செல்லும்போது சிறிது நேரம் ஒரு சூட்கேஸை தலையில் சுமந்து சென்றார்.
இந்நிலையில், ராகுல் காந்தி கூலியாக மாறி, தொழிலாளர்களுடன் உரையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. போர்ட்டர்களில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில், "ராகுல் காந்தி அவர்கள் எங்களை 5 நிமிடங்களுக்கு வந்து சந்திக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்." என்று கூறினார்.
"அவர் ஏழைகளுக்கு ஆதரவானவர் என்று நான் நம்புகிறேன், அவர் அவர்களுடன் சேர்ந்து நடப்பார், ஏழைகளின் நலன்களை இதயத்தில் வைத்திருப்பவர் என தெரிகிறது. அவரது கடின உழைப்பைத் தொடர வேண்டும் என்பதே அவருக்கான எனது செய்தி. பாரத் ஜோடோ யாத்ரா அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ” என்று மற்றொரு போர்ட்டர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
"நாங்கள் எங்கள் பிரச்சினைகளை அவருடன் விவாதிக்க விரும்புகிறோம்; அவர் அவற்றைக் கேட்டு ஏதாவது செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று மற்றொருவர் கூறினார்.
முன்னதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி, டெல்லியின் மொத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையில் விற்பனையாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது ஒரு காய்கறி விற்பனையாளர் கண்ணீருடன் விலைவாசி உயர்வு குறித்து தனக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் ஏற்படும் சிரமங்கள் பற்றி பேசினார். இதற்கு முன், அவர் கரோல் பாக்கில் மெக்கானிக்களை சந்தித்து உரையாடினார், அங்கு அவர் இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்பதிலும் தனது பங்கை முயற்சித்தார்.
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-turns-coolie-at-delhi-anand-vihar-interacts-with-workers-tamil-news-1378514