திங்கள், 18 செப்டம்பர், 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ஆன்லைனில் மட்டுமே மேல் முறையீடு; 30 நாட்கள் அவகாசம்

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள், செப்டம்பர் 18-ம் தேதி முதல் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள், செப்டம்பர் 18-ம் தேதி முதல் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். 
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் முதல் மாதம்தோறும் 1-ம் தேதியே மகளிர் உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற ஜூலை மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி வரை முதல் கட்டமாகவும்,  ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 2-வது கட்டமாகவும் விண்ணப்பங்கள்  பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. 

இந்த இரண்டு கட்டங்களிலும் விண்ணப்பம் செய்யாமல் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 18 முதல் 20-ம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள்  பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.



இதைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களை, தமிழக அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி  பெண்கள் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டதில், இந்த திட்டத்துக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஏன் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்பது குறித்து, குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு செப்டம்பர் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளன. குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.  மேல்முறையீடு ஆன்லைன் வழியாக மட்டுமே செய்ய முடியும். மேலும், இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு அலுவலராக வருவாய் கோட்டாட்சியர்  செயல்படுவார். ஆன்லைன் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். 

இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேரங்களில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kalaignar-magalir-urimai-thogai-thittam-appeal-starts-from-today-in-online-30-days-period-1349073