புதன், 27 செப்டம்பர், 2023

பெங்களூரு பந்த்: 144 தடை; கல்வி நிலையங்கள் விடுமுறை; தமிழக பஸ்கள் போக்குவரத்து பாதிப்பு

 Cauvery row Bengaluru Bandh highlights

முழு அடைப்பையொட்டி பெங்களூரு மாநகர மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

karnataka | Bengaluru Bandh: காவிரி நதி நீர் தொடர்பாக கர்நாடகம் - தமிழ்நாடு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது.

தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது . கடந்த 23ம் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் 26ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடக்கிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

 

முழு அடைப்பையொட்டி பெங்களூரு மாநகர மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பெங்களூரு நகர காவல் துறையினர் நள்ளிரவு முதல் 24 மணி நேரமும் தடை உத்தரவு பிறப்பித்தனர். நகரில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் பி தயானந்தா தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தயானந்தா கூறுகையில், 60 கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் (கேஎஸ்ஆர்பி) மற்றும் 40 சிட்டி ஆர்ம்ட் ரிசர்வ் (சிஏஆர்) உட்பட சுமார் 100 படைப்பிரிவினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பொதுப் போக்குவரத்து இயங்கும் அதே வேளையில் நமக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பெங்களூரு நகரில் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் என எதுவும் ஓடவில்லை. திரையரங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. அரசு - தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முழுஅடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பல போராட்டக்காரர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் ஹோட்டல்களை மூடுவதாக அறிவித்திருந்த ப்ருஹத் பெங்களூர் ஹோட்டல் அசோசியேஷன் தலைவர் பி.சி.ராவ், பின்னர் முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஆனால் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

ஓலா உபெர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தன்வீர் பாஷா, பெங்களூரு முழு அடைப்பு நேரத்தில் தங்கள் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் கர்நாடக முழு அடைப்புக்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்தார்.

கன்னட ஆதரவு அமைப்பான கர்நாடக ரக்‌ஷனா வேதிகே, முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள முதல்வர்களின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிடும் வகையில் செவ்வாய்க்கிழமை ஊர்வலம் செல்வதாக வேதிகே அமைப்பின் தலைவர் டி.வி.நாராயண கவுடா தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா, எக்ஸ் தள பதிவில், “விவசாயிகளின் கோபத்தைப் புரிந்து கொண்டதாகவும், அவர்களின் மற்றும் கன்னட ஆர்வலர்களின் எதிர்ப்பு உரிமைக்கு மதிப்பளிப்பதாகவும் கூறினார். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க மாட்டோம்” என்றார். சாமானியர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு ஏற்பாட்டாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

காவிரி பிரச்சனைக்காக இன்று பெங்களூரு முழு அடைப்பு நடத்த சில விவசாயிகள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பல கன்னட அமைப்பினர் கன்னட ஆர்வலர்கள் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 'கன்னட ஒக்குடா' என்ற பெயரில் செப்டம்பர் 29-ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஜேடி(எஸ்) மற்றும் ஆம் ஆத்மி கட்சி, பெங்களூரு நவநிர்மாணா கட்சி போன்ற கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


source https://tamil.indianexpress.com/india/cauvery-row-bengaluru-bandh-highlights-in-tamil-1384107