வியாழன், 28 செப்டம்பர், 2023

கொரோனாவைக் காட்டிலும் 7 மடங்கு ஆபத்தான வைரஸ்; 5 கோடி பேரை இழக்க நேரிடலாம்: உலக ஆராய்ச்சியாளர்கள்

 27 09 2023 

WHO.jpg

கணிதப் பாடத்தில் தெரியாத ஒரு மதிப்பை X என்பார்கள். அதே போல இந்த நோய்க்கு 'X' நோய் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதை உருவாக்கப் போகும் நோய்க் கிருமிக்கும் 'கிருமி X' என்றே பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதமே இதுபற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இப்போது மருத்துவ உலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் எங்கிருந்து உருவாகும்? யாரைத் தாக்கும்? கொரோனா இப்போது கிட்டத்தட்ட வைரஸ் ஜுரம் போல சகஜமாகிவிட்ட நிலையில், இது வெறுமனே பீதியைக் கிளப்பும் அறிவிப்பா? என்பது பற்றி இரண்டு பெண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பேசியுள்ளனர். 

கொரோனா காலத்தில் பிரிட்டனின் தடுப்பூசி திட்டத்துக்குத் தலைவராக இருந்தவர் கேட் பிங்காம் (Kate Bingham). அவர்தான் இதுகுறித்து முதலில் பேசியிருக்கிறார். "100ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் சுமார் 5 கோடி பேரைக் கொன்றது. இது முதல் உலகப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம். இப்போதும் ஒரு நோய் வந்து அந்த அளவுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே இருக்கும் வைரஸ்களில் ஏதோ ஒன்று, அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த உலகில் வாழும் மனிதர்களைவிட பல லட்சம் மடங்கு அதிகமாக வைரஸ் போன்ற நோய்க் கிருமிகள் உள்ளன. அவை தங்களுக்குள் உருமாற்றம் அடைந்து அதிகரித்தபடி இருக்கின்றன. அவற்றின் தொற்றும் தன்மையும் வீரியமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா எவ்வளவோ பரவாயில்லை. உலகம் முழுக்க சுமார் 2 கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தினாலும், அதிலிருந்து பலர் மீண்டுவிட்டார்கள். இறப்பு விகிதம் குறைவுதான். 

X நோயை ஏற்படுத்தப் போகும் நோய்க் கிருமி ஒருவேளை தட்டம்மை வைரஸ் போல வேகமாகத் தொற்றினால் என்ன ஆகும்? எபோலா வைரஸ் தொற்றியவர்களில் 100-ல் 67 பேர் இறந்தனர். அதே போல இது உயிரிழப்புகளை ஏற்படுத்தினால் என்ன பயங்கரம் நேரிடும்.  அப்படி ஒரு வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை, இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் பல்கிப் பெருகியபடி இருக்கிறது. யாரோ ஒரு மனிதர் அதனால் பாதிக்கப்படலாம். அவரிடமிருந்து உலகம் முழுக்க இது பரவலாம்" என்று எச்சரிக்கிறார் கேட் பிங்காம்.

"இதுவரை 25 வைரஸ் குடும்பங்களை நாம் கண்டறிந்திருக்கிறோம். நம்மால் அறியப்படாத லட்சக்கணக்கான வைரஸ் வகைகள் இருக்கின்றன. அவை ஒரு உயிரினத்திடமிருந்து இன்னொரு உயிரினத்துக்கு எளிதில் பரவலாம்" என்கிறார் அவர். காடுகளை அழிக்கிறோம், சதுப்பு நிலங்களை சமன் செய்து குடியேற்றங்கள் அமைக்கிறோம். இது எல்லாமே, இதுவரை மனிதர்களோடு தொடர்பற்று இருந்த பல உயிரினங்களையும் நோய்க் கிருமிகளையும் மனித இனத்துடன் நெருங்க வைக்கின்றன.

இதுவரை மனிதர்களைத் தொற்றும் தன்மை இல்லாமல் வன விலங்குகளில் மட்டுமே இருந்த கிருமிகள் ஏதேனும் திடீரென உருமாற்றம் அடைந்தால், அதன் விளைவு பயங்கரமாக இருக்கும். இன்னொரு பக்கம் உலகெங்கும் பல்வேறு ஆய்வுக் கூடங்களில் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. கிருமிகளை வைத்து உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கும் சோதனைகளையும் சில தேசங்கள் நடத்திவருகின்றன. இதில் எங்காவது இருந்து மோசமான கிருமிகள் கசிந்து மனிதர்களுக்குப் பரவும் ஆபத்தும் இருக்கிறது. உலகெங்கும் நகரங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்தபடி இருக்கிறது. அதனால் அது சீக்கிரமே நிறைய பேருக்குத் தொற்றும்.

  

 "X நோயிலிருந்து மக்களைக் காக்க நாம் தயாராக வேண்டும். அதற்காகவே இந்த எச்சரிக்கை. வேகமாகத் தடுப்பூசி தயாரிக்கும் வசதிகள், அவற்றை உலகம் முழுக்கக் கொண்டு சேர்க்கும் நெட்வொர்க் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். விமான நிலையங்களில், நாடுகளின் எல்லைகளில் சோதனை வசதிகளை நாம் சரியாகச் செய்யாததால்தான் கொரோனா வேகமாகப் பரவியது. அதுபோன்று இல்லாமல் இம்முறை வசதிகளை நன்றாக ஏற்படுத்த வேண்டும்" என்கிறார் கேட் பிங்காம்.

   

சீனாவின் 'வௌவால் பெண்' என்று அழைக்கப்படும் வைரஸ் ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லியும் (Shi Zhengli) இதேபோன்ற ஓர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார்.  சீனாவின் வூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்தே கொரோனா வைரஸ் கசிந்து மனிதர்களுக்குத் தொற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அங்குதான் இருக்கிறார் இவர். இவரும் இவர் குழுவினரும் இணைந்து 40 விதமான கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.  "இவற்றில் 20 வைரஸ்கள் ஆபத்தானவை. இந்த 20 வைரஸ்களில் 6 கொரோனா ரக வைரஸ்கள் ஏற்கெனவே மனிதர்களுக்குப் பரவி நோய்களை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் மூன்று வைரஸ்கள் விலங்குகளில் பரவி நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. ஏதோ ஒருவித உருமாற்றம் அடைந்து இவை மனிதர்களைத் தொற்றும் தன்மை பெறலாம்" என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

குறிப்பாக வௌவால்கள், எலி வகைகள், ஒட்டகம், பன்றி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்ற விலங்குகளிலிருந்து நோய்க்கிருமிகள் மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பு அதிகம் என்று ஷி ஜெங்லி கணித்துள்ளார். ஆபத்தைக் கணிக்கும் அதே நேரத்தில் இவர்கள் நோயைத் தடுக்கும் வாய்ப்புகளையும் கணிக்க வேண்டும் என்பதே மருத்துவ உலகின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதேநேரம் உலகம் முழுவதும் விரைவில் 5 கோடி பேர் இறப்பர் என்ற எச்சரிக்கை தற்போது அனைத்து மக்களையும் அச்சத்தில், அதிர்ச்சியில் உரையவைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்



source https://tamil.indianexpress.com/india/7-times-dangerous-than-corona-who-warns-about-x-virus-1385459