தமிழ்நாட்டில் முதல்முறையாக அர்ச்சகர் பயிற்சி முடித்த மூன்று பெண்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்
கடந்த 2006-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பதவி ஏற்ற போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தார். அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கென்று 2007-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஓராண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பேர் பயிற்சி முடித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை. இந்நிலையில், அர்ச்சரகாக தேர்ச்சி பெற்றுள்ள 3 பெண்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய மூன்று சகோதரிகள் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.
அந்த சகோதரிகளை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம். அவர்களுடைய பணிக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதியினை வழங்கினோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் – பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த சகோதரிகளின் பணி சிறக்கட்டும்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
source https://news7tamil.live/3-women-who-have-completed-priestly-training-smartphone-rs-25000-provided-by-minister-udayanidhi.html