வெள்ளி, 22 செப்டம்பர், 2023

கலைஞர் மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு : தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வலியுறுத்தல்!

 கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப மேல்முறையீடு செய்வது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் என நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாராகளுக்கு செப். 18 முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டாலும், பலருக்கு எஸ்எம்எஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் திரண்டு வருகின்றனர்.

அங்கு சர்வர் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக விண்ணப்ப நிலை குறித்த தகவல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் அங்கு முறையான வசதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியா் அலுவலகங்களில் , மகளிா் குவிந்திருக்க, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவாகளோ மேல்முறையீடு செய்வது எங்கே எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.

எனவே விண்ணப்ப மேல்முறையீடு செய்வது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவாகளுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


source https://news7tamil.live/magalir-urimai-thogai-scheme-appeal-urge-to-publish-clear-guidelines.html