வெள்ளி, 15 செப்டம்பர், 2023

இந்தியாவை இந்தி ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தம்! மத்திய அமைச்சர் க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

 14 09 2023 

இந்தியாவை இந்தி ஒன்றிணைப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவது அபத்தம் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருந்தார். அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:

உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலிருந்து இன்று வரை, ஹிந்தி முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்தி மொழி நமது கலாசார பாரம்பரியம். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பக்கதில் பதில் அளித்துள்ளார்.

அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

“இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது – பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது” என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.


source https://news7tamil.live/udayanidhi-stalins-response-to-union-minister-amit-shah.html