ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட1,591 குடியிருப்புகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. , வேலூரில் நடைபெற்ற நிகழச்சியில் பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து வேலூர் மேல்மொனவூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 79 கோடியே 70 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 591 குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை காணொலி வாயிலாக திறந்து வைத்த அவர், பயனாளிகளுடன் உரையாடினார். தொடர்ந்து மேல்மொனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை அவர் ஆய்வு செய்தார்.

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 நவம்பர் மாதம் வேலூர் அருகே மேல்மொணவூர் முகாமில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில், தற்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவில் அமைச்சர் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், செஞ்சிமஸ்தான், ஆர்.காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்

source https://news7tamil.live/1591-residences-built-for-sri-lankan-tamils-inaugurated-by-chief-minister-m-k-stalin.html