வியாழன், 28 செப்டம்பர், 2023

தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் – காரணம் என்ன?

 

தமிழ்நாட்டிற்கு  புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது என்பதை விரிவாக காண்போம்.

இந்தியாவில் மொத்தமாக  650 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் 99,163 மருத்துவக் கல்வி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2023 ஜனவரி மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி மொத்தமாக 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

அவற்றில்  37 அரசு மருத்துவக் கல்லூரிகள் 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள்  என  71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அனுமதியுடன் இயங்கி வருகின்றன.  37 அரசு மருத்துவக்  கல்லூரிகளில் 5,225 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில், தமிழ்நாட்டைப் போல ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு உள்ள மாநிலங்களை விட இங்குதான் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 11 ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மூலம் மருத்துவக் கல்வி நிறைவு செய்து வெளியே வருகின்றனர்.

அதே போல நமது நாட்டில் உள்ள டாப் 5 மருத்துவக் கல்லூரிகளைப் பட்டியலிட்டால், அதிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் 71 மருத்துவக் கல்லூரிகளில் தலா 153 இடங்கள் என்ற அளவில், 11,000-க்கும் அதிக மருத்துவக் கல்வி இடங்கள் இருக்கின்றன. 67 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு 10,945 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது கர்நாடகா.

தேசிய மருத்துவ ஆணையம் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவராவது இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 600 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கின்றனர். இதன் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான நோயாளிகள் ஒவ்வொரு வருடமும்  சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்கள். அதே போல தமிழ்நாட்டில் இருந்து திறமையான மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துமனைகள் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் பணி செய்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் மேலும் கல்லூரிகள் தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் விமான நிலையங்கள் உள்ளன. இதனால் ஒசூரில் புதிய விமான நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி கேட்ட போது தமி்ழ்நாட்டில் போதுமான விமானநிலையங்கள் உள்ளன. அதனால் மேலும் விமான நிலையங்கள் கேட்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/new-medical-colleges-denied-to-tamil-nadu-what-do-the-statistics-say.html