தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு வாகனங்கள், படகுகள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை எதன் வழியாவது மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி-யை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றொரு பதிவில், “கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mari-selvaraj-requests-to-rescue-20-village-people-at-flood-affected-area-in-tuticorin-districts-2031499