வியாழன், 21 டிசம்பர், 2023

கர்நாடகா: 48 மணி நேரத்தில் இரட்டிப்பான கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

 20/12/2023 

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை 28 ஆக இருந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2 நாட்களில் 1 நபர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். கர்நாடகா சுகாதாரத்துறை தகவலின்படி இன்று காலை 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 35 ஆக இருந்த எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை  6 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கேரளவில் இன்று நிலவரப்படி 2,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனாவால் மரணடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று  77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 35 பேரும், கோவாவில் 23 பேரும், புதுச்சேரி 20, குஜராத்தில் 12 பேரும், டெல்லியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 48 மணி நேரத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறை, முதியவர்கள், பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா சுகாதாரத்துறை ஆணையர் டி. ரன்தீப் வெளியிட்ட அறிக்கையில் “ 60 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள், சிறுநீரகம், இதயம், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும். மேலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் தடைவிதிக்க வேண்டாம் என்றும் கோவிட் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


source https://tamil.indianexpress.com/india/covid-19-cases-in-karnataka-double-in-48-hours-2034377