2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டம் (CAA) வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதாக அளித்த வாக்குறுதியிலிருந்து காங்கிரஸ் பின்வாங்குவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். “சி.ஏ.ஏ என்பது காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிரிக்கப்பட்டு, அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டபோது, அகதிகள் இந்தியாவிற்கு வரவேற்கப்படுவதாகவும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது,” என்று அமித்ஷா ET NOW குளோபல் உச்சி மாநாடு 2024 இல் கூறினார்.
சி.ஏ.ஏ சட்டம், குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது என்றும், யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல என்றும் அமித் ஷா வலியுறுத்தினார். “நமது நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக நமது முஸ்லிம் சமூகம் தூண்டிவிடப்படுகிறது. சி.ஏ.ஏ சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லாததால் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது. சி.ஏ.ஏ என்பது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான ஒரு சட்டம்,” என்று அமித் ஷா கூறினார்.
2019 இல் மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சி.ஏ.ஏ சட்டம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து, டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட, துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத குடியேற்றவாசிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து பேசிய அமித் ஷா, நரேந்திர மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பா.ஜ.க 370 இடங்களையும், என்.டி.ஏ 400 க்கும் அதிகமான இடங்களையும் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் முடிவு குறித்து எந்த சஸ்பென்ஸும் இல்லை என்றும், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கூட தாங்கள் மீண்டும் எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என்பதை உணர்ந்துள்ளதாகவும் அமித் ஷா வலியுறுத்தினார்.
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம். எனவே நாட்டு மக்கள் பா.ஜ.கவுக்கு 370 இடங்களையும், NDA 400 இடங்களுக்கு மேல் பெற்று ஆசீர்வதிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ET NOW குளோபல் உச்சி மாநாடு 2024 இல் அமித் ஷா கூறினார்.
கூடுதல் தகவல்கள்: PTI மற்றும் ANI
source https://tamil.indianexpress.com/india/bjp-govt-will-implement-caa-before-lok-sabha-polls-amit-shah-3681216