செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?

 

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து  விரிவாக காணலாம்.

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் உரையின் பல பகுதிகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அமர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பின்னர், அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும், ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். அவை நடந்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன் பின்னர் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று சட்டப் பேரவை கூடுகிறது.
தமிழ்நாடு சட்டபேரவையின் இன்றைய நிகழ்வுகள் என்னனென என்பது குறித்து காணலாம்

இன்றைய நிகழ்வுகள் : 

1. இரங்கற் குறிப்புகள்

ஆர். வடிவேல்  , ஏ. தெய்வநாயகம் , எம். தங்கவேல் , துரை இராமசாமி , கு.க. செல்வம்
எஸ். இராசசேகரன், ஆகிய சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகள் நிறைவேற்றப்பட உள்ளது.

2. இரங்கல் தீர்மானங்கள்

  • எஸ். வெங்கிடரமணன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்
  • மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், புகழ்பெற்ற கண் மருத்துவர்.
  • செல்வி எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு முன்னாள் ஆளுநர்.
  • எம்.எம். இராஜேந்திரன், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர்.
  • விஜயகாந்த், தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், உள்ளிட்டோருக்கு இன்றைய சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இதையடுத்து, வினாக்கள் விடைகள், மாற்றுத் தலைவர்கள் பட்டியல், ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆகிய நிகழ்வுகள் இன்றைய சட்டபேரவையில் நடைபெற உள்ளது.


source https://news7tamil.live/todays-events-in-the-tamil-nadu-legislative-assembly.html