டெல்லி விவசாயிகள், மத்திய அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் இன்று (பிப்.13) ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அம்மாநில தெருக்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டெல்லி போலீஸார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டமான, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியை பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று (பிப்.12) மாலை 5.30 மணியளவில் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், ராஜஸ்தான், உ.பி., பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆனால், மத்திய அரசு தரப்பில் அமைச்சர்கள், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதுகுறித்து, விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், “இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தது. எங்களது ஒவ்வொரு கோரிக்கை மீதும் விவாதம் நடைபெற்றது. அவை வெறும் கோரிக்கைகள் அல்ல, அரசின் வாக்குறுதிகள். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பிப்.13-ம் தேதி காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டெல்லி நோக்கி செல்ல வேண்டும் என்பது என் கருத்து” என தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, “பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காண அரசு விரும்புகிறது. சில கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டது. நிரந்தரத் தீர்வுக்கு குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்தோம். எந்தப் பிரச்சினையானாலும் விவாதித்து தீர்வு காணலாம். நாங்கள் அந்த தீர்வை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி முதல் கட்டமாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை துவங்கியது. அதன்பிறகு பிப்.10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/the-central-governments-negotiations-ended-in-failure-farmers-decided-to-leave-delhi-as-planned.html