பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியின் 10 ஆண்டுகளில் நாடு, பல அதிரடிகளை சந்தித்தது. அது குறித்து பார்ப்போம்…
தொடர்ந்து பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த, இந்திரா காந்தி,வாஜ்பாய் போல், அப்பதவியில் அமர்ந்தவர் நரேந்திர மோடி, தற்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் போல் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் வரிசையில் இடம் பெறுகிறார் நரேந்திரமோடி. அதே சமயம் கூட்டணி அரசு இது.
2014,2019 தேர்தல்களில் பாஜக முழு மெஜாரிட்டியுடன் கூடிய அரசை வழி நடத்தினார் மோடி. 2024 தேர்தலில் , மூன்றாம் முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி புதிய சிக்கலை எதிர் கொள்கிறார். ஆம் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகள் தயவில் தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா, டிஜிட்டல் பண பரிமாற்றம், யுபிஐ செயலியின் முழு பயன்பாடு, முத்ரா கடன் திட்டம் ,புதிய நாடாளுமன்ற கட்டிடம், ஜன் தன் வங்கிச்சேவை, சிறு குறு தொழில்களுக்கு அதிகரித்த கடன் அளவு போன்ற திட்டங்கள் மோடி ஆட்சியின் சாதனைகள் பிரச்சாரத்தில் முன் வைக்கப்பட்டன. ஆனாலும், முழு பெரும்பான்மை கிடைக்காமல் சென்ற நிலைக்கு, தன்னிச்சையாக பிரதமர் மோடி எடுத்த அதிரடிகள் தான் காரணம் என அரசியல் நிபுணர்களின் கருத்து .மறுபுறம் மக்களையும், மாநில அரசுகளையும் பாதிக்கும் திட்டங்கள், பாஜக அரசுக்கு எதிராக அமைந்தன என்கிறார்கள் எதிர்கட்சியினர். தனது கோட்டையாகக் கருதப்பட்ட மாநிலங்களில், பாஜக செல்வாக்கை இழந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பு அறிமுகம் செய்ப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளின் குரல்கள் எடுபடவில்லை என்கிறார்கள்.
2016 இல் திடீரென அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. புதிய ரூபாய் நோட்டுகளைப்பெற மக்கள் வங்கி வாசல்களில் நாள் கணக்கில் காத்து இருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகச் செயல்படுத்திய இந்தத் திட்டத்தால் முழுமையாகக் கறுப்புப் பணம் ஒழிக்கப்படவில்லை. ஆகவே, இதை அமல்படுத்தியதால் மக்கள் பின்னடைவுகளைச் சந்தித்தனர்.
மோடி அரசு கொண்டு வந்த, உதய் மின் திட்டத்தால், தனியார் மின் நிறுவனங்களுக்கு ஏக போக உரிமைகளை வழங்கும் வகையில் உள்ளது. உதய் மின் திட்டத்தால் நடுத்தர மக்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பாதிக்கப்படுவதாக தொழில்துறையினர் தெரிவிகின்றனர்.
அடுத்ததாக ஜிஎஸ்டி எனப்படும்… சரக்கு மற்றும் சேவை வரி கடும் எதிர்ப்புகளூக்கிடையே நடைமுறைப்படுத்தியது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் போது , வரி குறையும், விலைவாசி குறையும் என்ற அறிவிப்புகள் ,புஸ்வானமாகி போனது. விலை வாசி அதிகரித்தது. ஜிஎஸ்டி வரிமுறையால் மாநில அரசுகளின் உரிமையும், வருவாயும் சுரண்டப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மேலும், அக்னிவீர் திட்டம் மூலம் தேர்வாகும் ராணுவ வீரர்களின் பணிக்காலம் 4 ஆண்டு காலம் என்பது இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தில் சேரும் வீரர்களை கடும் நெருக்குதலுக்கு உள்ளாக்கி, அவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை ரத்து செய்வோம் என்றார் ராகுல்காந்தி.
விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலையை வேளாண்மை பொருட்களுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த போராட்டத்தில் 750 விவசாயிகள் உயிர் நீத்தனர், விவசாயிகளின் எதிர்ப்பால் மட்டுமே, ஹரியானா, ஜார்கண்ட், பஞ்சாப், உபி போன்ற மாநிலங்களில் 40 தொகுதிகளுக்கு மேல் பாஜக இழந்துள்ளது என்கிறார்கள்.\
2019 இல் ஜம்மு & காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து 370 சட்டத்தைத் திரும்பப் பெற்றது. அம்மாநிலத்தை மூன்றாக பிரித்தது. சிறுபான்மை மக்களிடையே அதிக அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் மக்களின் இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள வன்முறையை நிறுத்த ,எந்த முயற்சியையும் எடுக்காதது பெரும் விமர்சனத்தை சந்தித்தது..
அதேபோல் தேசியக் கல்விக் கொள்கையும் மாநிலங்களின் உரிமையையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. பாஜக கடந்த காலங்களில் செயல்படுத்திய பல திட்டங்கள் மீண்டும் திரும்பப் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் எதிர்க்கட்சியினர்……
குஜராத் முதல்வராக பதிமூன்று ஆண்டுகள், இந்திய பிரதமராக 10 ஆண்டுகள் என முழுமையான மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்த அனுபவம் கொண்டவர் மோடி. முதல் முறையாக கூட்டணி அரசை, பிற கட்சிகளின் ஆதரவுடன் எப்படி வழி நடத்துவார்…வாஜ்பாய் மாதிரி மோடி, கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்படுவாரா? சொன்னபடிம நிலையான, வலுவான அரசை கொடுப்பாரா மோடி,? பொறுத்திருந்து பார்க்கலாம்…
source https://news7tamil.live/during-the-last-10-years-of-narendra-modis-rule-the-country-has-undergone-many-dramatic-changes.html