அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியர்களும் இனி அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து தரப்பினருக்கும் புறநோயாளிகள் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் முதல்வா் மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு இருந்தால் மட்டுமே இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அரசு ஊழியா்களிடம் அலுவலகங்களில் வழங்கப்படும் மருத்துவ காப்பீடு இருந்த நிலையிலும், அவை அரசு மருத்துவமனைகளில் ஏற்கப்படாமல் இருந்தது. அதே சமயம், அவா்களுக்கு முதல்வா் காப்பீடு அட்டையும் வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியா்கள் உயா்தர சிகிச்சை பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களும், அவா்களது குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் ரூ. 5 லட்சம் வரை அறுவை சிகிச்சைகளை பெறலாம் என்றும், மேலும் ரூ. 10 லட்சம் வரை சிறப்பு சிகிச்சைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/treatment-in-the-insurance-scheme-for-government-employees-announcement.html