திங்கள், 3 ஜூன், 2024

இது மோடி மீடியா கருத்துக்கணிப்பு’ இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும் - ராகுல் காந்தி

 காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியான கருத்துக் கணிப்புகளை “மோடி மீடியா கருத்துக்கணிப்பு” என்று அழைத்தார். மேலும், இந்தியா கூட்டணி 295 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று ‘எக்ஸிட் போல்’ என்கிற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இன்று பிற்பகல் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மோடி கருத்துக்கணிப்பு... இது ‘எக்ஸிட் போல்’ கிடையாது. இது மோடி மீடியா கருத்துக்கணிப்பு. இது மோடியின் கருத்துக்கணிப்பு, அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. சித்து மூஸ்வாலாவின் 295 பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?

முன்னதாக, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை வேட்பாளர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் மாநில பிரிவு தலைவர்களுடன் காணொலி வழியாக கூட்டம் நடத்தினர்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் சனிக்கிழமை கூடினார்கள். அப்போது அவர்கள், எதிர்க்கட்சிகளின் வெற்றி எண்ணிக்கை 272 என்ற பாதி அளவைத் தாண்டும் என்று கூறினர். இந்த கூட்டத்தில் பல தலைவர்கள் தொலைக்காட்சி சேனல்களில் கருத்துக்கணிப்பு விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் முடிவு தவறான செய்தியை அனுப்புவதாகத் தெரிவித்தனர்.

எப்படியும் தங்கள் செய்தித் தொடர்பாளர்களை அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்த காங்கிரஸ், மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் முடிவை அறிவித்தது. காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதாக பா.ஜ.க ஏற்கனவே கூறியுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் அறிவித்தது.

கூட்டத்தில் இருந்த தலைவர்களில் ஒருவர் கூறுகையில், பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக இருக்கும், ஆனால், பாதி இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பதுதான் ஒருமித்த கருத்தாக உள்ளது என்று கூறினார்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறினார்.

பெரும்பாலான மூத்த தலைவர்கள் வாக்கு எண்ணும் நாளுக்கு ஒரு நாள் கழித்து புதன்கிழமை காலை டெல்லி சென்றடைவார்கள் என்று முடிவு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-not-exit-polls-modi-media-poll-india-bloc-will-win-295-seats-lok-sabha-4737898