சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காத்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/fact-check-on-dmk-rs-bharathi-waiting-in-front-of-the-nda-leaders-house-door-for-alliance-talk-tamil-news-4754197
ஒரு வீட்டின் மிகப்பெரிய இரும்பு கதவுக்கு முன்பாக தி.மு.க-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அண்ணன் ஆர்.எஸ் பாரதி எங்கடா? இப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் நித்திஷ் குமார் வீட்டு வாசலில் காத்துட்டு இருக்கார்! உண்டி கூட்டணிக்கு வருவார்களான்னு!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களை இழுக்க அவர்கள் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி காத்துக் கொண்டிருக்கிறார் என்று புகைப்படத்துடன் கூடிய பதிவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். கூட்டணிக் கட்சித் தலைவர்களை இழுக்க சரத்பவார் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியானது. ஆனால், அதை சரத் பவார் மறுத்தார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என்று இந்தியா கூட்டணி முடிவெடுத்துவிட்டது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களை இழுக்க ஆர்.எஸ்.பாரதி முயற்சி செய்வது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் கூட்டணி ஏற்படுத்த மேல் மட்ட அளவிலேயே தலைவர்கள் பேசிக்கொள்வார்கள். இப்படி வீட்டு வாசலில் அனுமதியின்றி சென்று காத்திருக்க வேண்டியது இல்லை. டெல்லி விமானநிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்தும் பேசியுள்ளார். இப்படியான சூழலில், எதற்காக ஆர்.எஸ்.பாரதி தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டுக்கு சென்றிருப்பார்? என்ற கேள்வி எழுந்த நிலையில், அது தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியுள்ளனர். அப்போது இந்த புகைப்படத்தை மின்னம்பலம் என்ற ஊடகம் 2023 ஜூனில் தங்கள் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதில், “செந்தில் பாலாஜி இல்லத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வருகை” என்று குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை செய்தபோது அங்கு ஆர்.எஸ்.பாரதி வந்தார் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி நிற்கிறார் என்ற தகவல் தவறானது என்பதை உறுதி செய்துள்ளனர்.
முடிவில், இந்தியா கூட்டணிக்கு இழுப்பதற்காக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி காத்துக்கொண்டிருக்கிறார் என்று பரவும் புகைப்படம் 2023ல் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்த போது எடுக்கப்பட்டது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.