33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
தகுதிநீக்கம்
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த நிலையில், வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், 'இனி என்னிடம் போராட சக்தியில்லை' என்று கூறி மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தரப்பில் நாட்டின் மிக முன்னணி வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே, சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் இன்று ஆஜராகி இருக்கிறார். இந்த நிலையில், இந்தியாவின் டாப் வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே யார்? அவரது பின்னணி என்ன? அவர் இதுவரை வாதாடிய முக்கிய வழக்குகள் என்ன என்பது பற்றி இங்குப் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், கிங்ஸ் ஆலோசகருமான சால்வே, சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவை வாதிடுவது முதல், சைரஸ் மிஸ்திரிக்கு எதிரான தனது போரில் ரத்தன் டாடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது வரை மிக முக்கியமான வழக்குகளைக் கையாள்வதில் சிறந்த சாதனை படைத்தவர். அவர் ஆருஷி-ஹேம்ராஜ் வழக்கில் பாதுகாப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
யார் இந்த ஹரிஷ் சால்வே?
இந்தியாவின் மிக முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வே மகாராஷ்டிராவில் பிறந்தவர். முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் நிர்வாகியுமான என்.கே.பி. சால்வேயின் மகன் ஆவார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் தனது சட்டத்தை முடித்த சால்வே 1992 இல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதன்பின்னர் அவர் நவம்பர் 1999 இல் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை ஹரிஷ் சால்வே கடந்த 2015ல் பெற்றார். கடந்த ஆண்டு ஜனவரியில், வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து நீதிமன்றங்களில் ராணியின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். டாடா குழுமம் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அவரது முக்கிய வாடிக்கையாளர்கள் ஆவர்.
முக்கிய வழக்குகள்
குல்பூஷன் ஜாதவ் வழக்கு: 2016ல், இந்திய தொழிலதிபர் குல்பூஷன் யாதவ், ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இருந்து கடத்தப்பட்டார். பாகிஸ்தான் அரசு அவரை உளவாளி என்று குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
2017 ஆம் ஆண்டில், ஹரிஷ் சால்வே சர்வதேச நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் அவரது வலுவான வாதங்கள் ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வழிவகுத்தது. சுவாரஸ்யமாக, அவர் தனது சட்டக் கட்டணமாக 1 ரூபாய் மட்டுமே வசூலித்தார்.
ராமர் கோவில் சர்ச்சை: ராம ஜென்மபூமி சர்ச்சையில் இந்து தரப்பு வழக்கறிஞர்களில் சால்வேயும் ஒருவராக இருந்தார். சர்ச்சைக்குரிய அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாடா சன்ஸ் vs சைரஸ் மிஸ்ட்ரி: 2016 இல், ஹரிஷ் சால்வே டாடா சன்ஸ் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது திறமையான வாதங்கள் மற்றும் சட்ட மூலோபாயம், டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கிய டாடா குழுமத்தின் முடிவை நீதிமன்றம் உறுதி செய்தது.
ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு
இந்நிலையில், சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவின் மிக முன்னணி வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே ஆஜரானார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு மனு மீதான விசாரணை தொடங்கியது.
அப்போது, வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/sports/who-is-harish-salve-fights-vinesh-phogats-olympic-disqualification-case-tamil-news-6810390