குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
குரங்கம்மை (மங்கி பாக்ஸ்) பாதிப்பு ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் ஏற்படுகிறது. பொதுவாக ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த பாதிப்பு அதிகம் காணப்பட்டு வருகிறது. கடந்த 2022-ல் குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்தது. இதனையடுத்து, உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்தது. தொடர்ந்து இந்த நோய் பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து நோய் பரவலின் தீவிரம் குறைந்தது. இந்த நிலையில், குரங்கம்மை நோயை மீண்டும் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் 2வது முறையாக உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கோ நாட்டில் தற்போது குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில் அண்டை நாடான ஆப்பிரிக்காவிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில் அம்மை பாதிப்பில் ஏற்படுவதைப் போலக் கொப்புளங்கள் ஏற்படும். இந்த தொற்றின் முக்கிய அறிகுறிகள் தோல் அரிப்பு, சீழ் வழிதல், 2-4 வாரங்கள் நீடிக்கும் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு அடைதல், நிணநீர் கணுக்கள் வீக்கம் அடைதல் உள்ளிட்டவை ஆகும். குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்தும் இந்த தொற்று பரவும்.
தோல் புண்களை சோதித்து இந்த தொற்று உறுதி செய்யப்படுகிறது. குரங்கம்மை நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள பாதிக்கபட்டவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி மூலமாகவும் இதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமை படுத்தப்படுவர். இதன் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க படும். மங்கி பாக்ஸ் பாதிப்பு பொதுவாக 15 நாட்களில் குணமடைந்துவிடும்.
இந்த சூழலில் சுகாதாரத்துறை பாதுகாப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, “மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களது பகுதியில் இந்த அறிகுறியுடன் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என உறுதி செய்ய வேண்டும். தொற்று பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். சென்னை, எஸ்பிஎச்எல் மருத்துவமனைக்கு மாதிரி அனுப்பி சோதனை செய்யலாம்.
ஆப்பிரிக்காவில் பரவும் குரங்கம்மை தொற்று மட்டுமல்லாது பாலியல் தொடர்பு மூலமாக புதிதாக பரவிவரும் மங்கி பாக்ஸ் வெரியன்ட் தொற்று ஆப்பிரிக்கா நாட்டிற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கும் அவசரநிலை. தற்போது வரை தமிழ்நட்டில் எந்த பாதிப்பும் இல்லை. எனினும் அரிதாக பரவும் இந்த தொற்று பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/re-spreading-monkeypox-health-department-advice.html