முஸ்லிம் நிறுவன பல்கலையை குறி வைத்து அசாம் முதல்வர் பேச்சு
/indian-express-tamil/media/media_files/gkM0l6OrgPlfDJK9p5en.jpg)
குவஹாத்தியில் வெள்ள மேலாண்மை குறித்து அசாம் அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நகரின் புறநகரில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை குறிவைத்து, "வெள்ள ஜிஹாத்" நடத்துவதாகக் கூறினார். அந்தப் பல்கலைக்கழகம் பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆகும்.
ஆகஸ்ட் 5 அன்று, குவஹாத்தியில் மதியத்தில் சில மணிநேரம் பெய்த மழை தொடர்ந்து, நகரையே ஸ்தம்பிக்கச் செய்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, கவுகாத்தி உயர் நீதிமன்றம், நகரத்தில் தண்ணீர் தேங்குவது தொடர்பான பொது நல வழக்கை (பிஐஎல்) விசாரித்து, சர்மா தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடியது.
கவுகாத்தி நகரின் குடிமக்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனையை கவனத்தில் கொண்டு, தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, "குவஹாத்தியில் தண்ணீர் தேங்குதல்/வெள்ளம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நகரத்தில் இந்த பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.
இதன் பின் அடுத்த சில நாட்களில், அசாமின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர், நகரத்தை மூழ்கடித்த "பாதிக்கும் அதிகமான தண்ணீர்" "மேகாலயாவில் இருந்து வந்தது, குவஹாத்தி அல்ல" என்று கூறினார்.
நகரில் 1.5 மணி நேரத்தில் 136 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், தற்போதுள்ள வடிகால் அமைப்பால் ஏற்க முடியாத அளவு மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார். நகரமும் அதன் நிர்வாகமும் "மேகாலயாவிலிருந்து வரும் தண்ணீரைக் கையாள முடியாது" என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை, சர்மா இதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றார்.
அண்டை மாநிலத்தின் ரி-போய் மாவட்டத்தில் அமைந்துள்ள மேகாலயா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (USTM) மீது அவர் குறிப்பாக குற்றம் சாட்டினார். மேகாலயா மலைகள் ஜோராபத்தில் குவஹாத்தியில் இறங்கும் மாவட்டம் இது.
யுஎஸ்டிஎம், 2008-ல் நிறுவப்பட்ட ஒரு தனியார் பல்கலைக்கழகம், கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது, இந்த பல்கலை மஹ்புபுல் ஹோக்கால் நிறுவப்பட்டது. ஹோக் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.
ஹோக் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆவார். இவரின் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 6,000 மாணவர்கள் படிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள்.
சர்மா அந்த பகுதியில் உள்ள மலைகளில் காடுகளை அழிப்பதை வெள்ளத்தின் பின்னணியில் உள்ள காரணங்களாக சுட்டிக்காட்டினார், மேலும் இந்த நிறுவனத்தை "ஜிஹாத்" என்று குற்றம் சாட்டினார். அங்கு மருத்துவக் கல்லூரிக்கான வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அவர் சுட்டிக்காட்டினார்.
“USTM உரிமையாளர் ஒரு ஜிஹாத்தை ஆரம்பித்துவிட்டார் என்று நினைக்கிறேன். நாங்கள் நில ஜிகாத் பற்றி பேசுகிறோம், அவர் அஸ்ஸாமுக்கு எதிராக வெள்ள ஜிகாத் தொடங்கியுள்ளார். இல்லையெனில், யாராலும் இரக்கமற்ற முறையில் இவ்வாறு மலைகளை வெட்ட முடியாது.
அவர் மேலும் கூறுகையில், “இயற்கையை நேசிக்கும் எவரும், குறிப்பாக ஒரு கல்வி நிறுவனத்தால் இதை செய்ய முடியாது. நான் அதை ஒரு ஜிஹாத் என்று அழைக்க வேண்டும் ... இது வேண்டுமென்றே செய்வது என்று நான் நம்புகிறேன்.
இல்லாவிட்டால், மலைகளையும் மரங்களையும் வைத்துக்கொண்டு கூட கட்டிடக் கலைஞரை அழைத்து கட்டிடம் கட்டலாம். அவர்கள் வடிகால் செய்ய முடியும்… அவர்கள் எந்த கட்டிடக் கலைஞரையும் பயன்படுத்தவில்லை. வெறும் புல்டோசர்களை பயன்படுத்தி, நிலத்தை வெட்டியிருக்கிறார்கள்,'' என்றார்.
அசாமில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு படிப்பதையும் வேலை செய்வதையும் நிறுத்துவதுதான் "ஒரே தீர்வு" என்று சர்மா அறிவித்தார், மேலும் அவர்கள் அங்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: After ‘fertilizer jihad’, Himanta Biswa speaks of ‘flood jihad’, targets Muslim-owned university
“நாளை முதல், கவுகாத்தியில் இருந்து மாணவர்கள் அங்கு படிக்க செல்வதை நிறுத்திவிட்டால், கவுகாத்தியின் வெள்ளம் நின்றுவிடும்... நான் (மேகாலயா முதல்வர்) கான்ராட் சங்மாவிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளேன், அவரையும் சந்திப்பேன் என்றார்.
முன்னதாக, முஸ்லிம் விவசாயிகள் உர ஜிஹாத்தில் ஈடுபடுவதாக சர்மா குற்றம் சாட்டினார்.
சர்மா முன்பு பெங்காலி-முஸ்லிம் விவசாயிகள் "உர ஜிஹாத்" செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இது அவர்களை காய்கறிகளை வளர்ப்பதில் "கட்டுப்பாட்டுமின்றி உரங்களைப் பயன்படுத்துவது மக்களிடையே நோயை ஏற்படுத்தும் என்றார்.