ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

வெளிநாட்டில் வேலை; பல ஆயிரம் பேரை பல லட்சங்கள் வரை ஏமாற்றிய மர்ம கும்பல்; சுற்றி வளைத்த புதுவை போலீஸ்

 

வெளிநாட்டில் வேலை; பல ஆயிரம் பேரை பல லட்சங்கள் வரை ஏமாற்றிய மர்ம கும்பல்; சுற்றி வளைத்த புதுவை போலீஸ்

puducherry crime police arrests internet fraudsters abroad job from UP Tamil News

குற்றவாளிகள் இதுபோன்று குற்றசெயல் புரிய பலவகையான செல்போன், லேப்டாப், சிம் கார்ட் மற்றும் ஏ.டி.எம் கார்ட்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய உத்தர பிரதேத்தை சேர்ந்த 4 இளைஞர்களை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர். 

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு குறித்து பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்துள்ளார். பிறகு, அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரை அவர் தொடர்பு கொண்டபோது, தன்னை ஒரு நிர்வாக அதிகாரியாக அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர், அவருக்கு கனடாவில் வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். 

மேலும், விசா (வேலை அனுமதி), மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணத்தை டெபாசிட் செய்தால் மேற்படி வெளிநாட்டு வேலை உறுதியாக கிடைக்கும் என்பது போன்ற ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அவரிடமிருந்து சுமார் ரூ. 17,71,000 பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து, ஏமாற்றப்பட்ட ரமேஷ் குமார் இணைய வழி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை பதிவு செய்துகொண்ட புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், கடந்த மார்ச் 23 ஆம் தேதி இந்திய தண்டைனைச் சட்டம் 419, 420 66 (டி) 2000 தொழில்நுட்ப சட்டம்  உள்ளிட்ட  பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

குற்ற செயலை புரிந்த நபரை பற்றி கண்டுபிடிக்க கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நவீன முயற்சிகளான அவர்களது வங்கி பரிவர்த்தனை, டெலகிராம் தொடர்புகள், வாட்ஸ் ஆப் தொடர்புகள், இரவு தங்கும் இடங்களின் இருப்பிடம் முதலிய தரவுகளை வைத்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், குற்ற செயல்களை புரிந்த குற்றவாளிகள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. 

இதனிடையே, சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்று விசாரனை மேற்கொண்டபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களின் இருப்பிடத்தை இணையவழி தொழில் நுட்பம் மூலம் அறிந்து நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்.2) குற்றவாளிகளான சுபம் ஷர்மா, அவரது கூட்டாளிகளான தீபக் குமார், ராஜ் கௌண்ட், நீரஜ் குர்ஜார் ஆகியோரை கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குற்றவாளிகள் இது போன்று கூட்டாக சேர்ந்து இந்தியா முழுவதும் 3400-க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியிருப்பதும், அவர்களை ஒன்பது மாநில போலிசார்களான கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், டெல்லி, அசாம், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேற்படி குற்றவாளிகளை தேடி வருவதாகவும் தெரியவந்தது.

அவர்களை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அசாம் கான் என்பவர் அவரது தலைமையின் கீழ் மேலே குறிப்பிட்டுள்ள குற்றவாளிகள் தனிக்குழுக்களாக அமைத்து, அவர்களை வைத்து கிட்டதட்ட 3400-க்கு மேற்பட்ட நபர்களை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடமிருந்து சுமார் 200 கோடிக்கு மேல் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

அத்துடன், அவர்கள் அனைவரும் பல்வேறு நபர்களை சுமார் 6 கோடி வரைக்கும் ஏமாற்ற வேண்டும் என்று குறிக்கோள் எடுத்து அவர்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என்றும், எவ்வாறு ஏமாற்ற வேண்டும், அவர்களிடமிருந்து எவ்வளவு பணத்தை கேட்க வேண்டும் என்றும், எந்த வங்கி கணக்குகள் கொடுக்க வேண்டுமென்றும் திட்டமிட்டு (PLANNING CHART) இருந்துள்ளனர். அதன்படி பல்வேறு தரப்பட்ட நபர்களை கடந்த பல வருடங்களாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. 

மேலும், குறிப்பிட்ட குற்றவாளிகள் அவர்களது குற்ற செயலுக்காக அசாம் கான்-யிடமிருந்து ஏமாற்றப்பட்ட பணத்திலிருந்து கமிஷன் பணமாக 50% பெறுவார்கள் என்பதும், அதன்மூலம் மேலே குறிப்பிட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு நபர்களை ஏமாற்றி அதன்மூலம் பெற்ற பணத்தில் சுமார் 22 லட்சம் மதிப்பிலான ஆடம்பரமான கார் மற்றும் தற்போது ஒரு கோடி 16 லட்சம் மதிப்பிலான பிளாட் ஒன்றினை புக் செய்து அதற்கு முன்பணமாக ரூ. 12 லட்சம் பணத்தை முன்பணமாக டெபாசிட் செய்திருப்பதாகவும் விசாரனையில் தெரியவந்தது. 

குற்றவாளிகள் இதுபோன்று குற்றசெயல் புரிய பலவகையான செல்போன், லேப்டாப், சிம் கார்ட் மற்றும் ஏ.டி.எம் கார்ட்கள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து 21 செல்போன்,  2 பாஸ்போட், 42 சிம் கார்ட்-கள், 1 லேப்டாப், 64 ஏ.டி.எம் கார்ட்-கள், ரூ.41 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்களை இன்று சனிக்கிழமை தலைமை குற்றவியல் நீதிபதி  பாலமுருகன் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

இணைய வழியில் வருகின்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்மந்தமாக எந்த செய்தியையும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், அதனுடைய உண்மை தன்மை அறிந்த பிறகு பணம் செலுத்துங்கள் என்றும் புதுச்சேரி இணைவழி போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


source https://tamil.indianexpress.com/india/puducherry-crime-police-arrests-internet-fraudsters-arrested-abroad-job-from-up-tamil-news-6796845