புதன், 14 ஆகஸ்ட், 2024

உள் இடஒதுக்கீடு தீர்ப்பில் மாநிலங்களின் அதிகாரத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்; எதிர்ப்பது ஏன்? ரவிக்குமார் எம்.பி விளக்கம்

 14 08 2024


உள் இடஒதுக்கீடு தொடர்பாக பாராளுமன்றத்தின் மூலம் செய்ய முடியாத திருத்தத்தை இப்பொழுது உச்ச நீதிமன்றத்தின் மூலமாக பா.ஜ.க அரசு செய்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

“உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஒரு வரலாற்றுக் குறிப்பு

உச்சநீதிமன்ற வழக்கின் மையமான கேள்வியாக அமைந்தது சின்னையா வழக்கில் உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு மாற்றப்பட வேண்டுமா? என்பதுதான். அதைப் புரிந்துகொள்ள இந்த வழக்கின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

1996 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசு நீதிபதி ராமச்சந்திர ராஜு என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் எஸ்.சி பட்டியலில் 59 சாதிகள் உள்ளன. 15% எஸ்.சி மக்கள் உள்ளனர். இட ஒதுக்கீட்டின் பலனை ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள் அது எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அந்தக் குழு அமைப்பதற்குக் காரணம் சொல்லப்பட்டது. அந்த குழு எஸ்.சி பட்டியலில் உள்ள சாதிகளில் 12 சாதிகளை ஒரு தொகுப்பாக ஆக்கி அதற்கு 1% இட ஒதுக்கீடும்; மாதிகா குழுவைச் சேர்ந்த 18 சாதிகளுக்கு 7% இட ஒதுக்கீடும்; மாலா குழுவைச் சேர்ந்த 25 சாதிகளுக்கு 6% இட ஒதுக்கீடும்; ஆதி ஆந்திரா குழுவைச் சேர்ந்த 4 சாதிகளுக்கு 1% இட ஒதுக்கீடும் கொடுப்பதற்குப் பரிந்துரை செய்தது. 

அதைப்பற்றி தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டது. “ஆந்திர பிரதேசத்தின் உள் ஒதுக்கீட்டுக்கான நடவடிக்கை போதுமான தரவுகளின் அடிப்படையில் செய்யப்படவில்லை. எனவே, அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்த முடிவும் சரியாக இருக்காது” என்று தேசிய எஸ்.சி ஆணையம் கருத்து தெரிவித்தது. அவ்வாறு இருந்தும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு அங்கிருக்கும் 59 பட்டியல் சாதிகளை ஏ, பி, சி, டி என நான்கு தொகுதிகளாகப் பிரித்து அவசர சட்டம் பிறப்பித்தது. அந்த சட்டம் செல்லும் என ஆந்திர உயர் நீதிமன்றம் 2000 இல் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசமைப்புச் சட்ட உறுப்பு 341 இல் பாராளுமன்றம் மட்டுமே மாற்றம் செய்ய முடியும், மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று 2004 இல் தீர்ப்பு அளித்தது. சின்னையா வழக்கு என்று அறியப்படும் தீர்ப்பு அதுதான். 

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. பாராளுமன்றத்தில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 341 இல் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியது. ஒன்றிய அரசு அது குறித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கருத்துகளை 28.3.2005 இல் கேட்டது. அது அட்வகேட் ஜெனரலை அணுகியது. 

“இத்தகைய உள் ஒதுக்கீடுகள் சட்டப்படியாக செய்யப்பட வேண்டும். அதனால் பட்டியல் சமூக இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது. இதைப் பற்றி அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரலாம்” என்று அட்வகேட் ஜெனரல் ஆஃப் இந்தியா கருத்து தெரிவித்தார். 

அந்தக் கருத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு இது பற்றி விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மெஹரா என்பவர் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கியது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 341 இல் புதிதாக ஒரு பிரிவை சேர்க்கலாம் என்று அந்த ஆணையும் பரிந்துரைத்தது. 

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் சட்டமன்றங்களின் தீர்மானத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு உள் ஒதுக்கீட்டுக்கான திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வரலாம் என்று கூறியது. அது தொடர்பாக சமூக நீதி அமைச்சகம் அரசமைப்புச் சட்ட உறுப்பு 341 இல் சேர்க்க வேண்டிய இரண்டு செக்ஷன்களின் வரைவை இந்திய அரசுக்கு சமர்ப்பித்தது. 

இந்தப் பரிந்துரை குறித்து மாநிலங்களின் கருத்துக்களை கோரி 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அதை அனுப்பி வைத்தது. அதன் பிறகு 2023 வரையிலான 11 ஆண்டு காலத்தில் 20 மாநிலங்களும் 2 யூனியன் பிரதேச அரசுகளும் அதைப் பற்றிய தமது கருத்துக்களை ஒன்றிய அரசுக்குத் தெரிவித்தன. 

மேற்கு வங்கம், ஒடிசா, கேரளா, மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், குஜராத், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மணிப்பூர், அஸ்ஸாம், கோவா, டெல்லி ஆகியவை உள் ஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்தை எதிர்த்துக் கருத்து தெரிவித்தன. “எஸ்.சி மக்களை அது பிரித்து பலவீனப்படுத்திவிடும்” என அவை அச்சத்தைத் தெரிவித்தன. பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 7 மாநில அரசுகள் மட்டுமே உள் ஒதுக்கீடு செய்ய ஆதரவு தெரிவித்தன. இந்தத் தகவலை சமூக நீதி இணை அமைச்சராக இருந்த நாராயணசாமி 2023 ஜூலை மாதத்தில் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 341 ஐத் திருத்தம் செய்து உள் ஒதுக்கீடு கொடுப்பதற்குப் போதுமான மாநில அரசுகளின் ஆதரவு கிடைக்காததால் ஒன்றிய பா.ஜ.க அரசு அந்த வழியைக் கைவிட்டு உச்சநீதிமன்றத்தின் மூலம் அதை இப்போது செய்திருக்கிறது. 

பா.ஜ.க அரசு அப்போது பாராளுமன்றத்தின் மூலமாக அந்த சட்டத் திருத்தத்தைச் செய்ய வேண்டும் என்றுதான் முயற்சி எடுத்ததே தவிர மாநில அரசுகளிடம் அந்த அதிகாரத்தைக் கொடுப்பதற்கு அந்த சட்டத் திருத்தக் குறிப்புகளில் சொல்லப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்தான் அதைத் தெரிவித்தது. அதைத் தாக்கல் செய்தவர் தலைமை வழக்கறிஞர் திரு வெங்கட் ரமணி ஆவார். 

பாராளுமன்றத்தின் மூலம் செய்ய முடியாத திருத்தத்தை இப்பொழுது உச்ச நீதிமன்றத்தின் மூலமாக ஒன்றிய பா.ஜ.க அரசு செய்திருக்கிறது. 

பா.ஜ.க அரசு அரசமைப்புச் சட்ட உறுப்பு 341 ஐத் திருத்தலாம் என உஷா மெஹரா கமிஷன் சொன்னபோது அதைத் தேசிய எஸ்.சி ஆணையம் ஏற்கவில்லை.அது ஏன்? 

அந்தத் திருத்தத்துக்கு கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் உட்பட 13 மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அது ஏன்? 

மாநிலங்களுக்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கித் தன்னிடம் சேர்த்துக்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த வழக்கில் மட்டும் மாநிலங்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்கலாம் எனத் தெரிவித்தது. அது ஏன்? 

இந்தக் கேள்விகளுக்குப் பதில் காணும்போது பா.ஜ.க அரசின் சனாதன செயல்திட்டத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-mp-ravikumar-explains-why-oppose-supreme-court-verdict-on-sc-sub-categorisation-6855216