ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; மத்திய அரசு நிராகரிப்பு

 

பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான (எஸ்.சி, எஸ்.டி) இடஒதுக்கீட்டில் உள்ள கிரீமி லேயரை விலக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை அதை நிராகரித்தது.  "பி.ஆர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு படி எஸ்.சி / எஸ்.டி இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படாது” என்று கூறியது. 

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான  இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமிலேயா்) பிரிவை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. 

இதையடுத்து, நேற்று பா.ஜ.கவின் எஸ்.சி, எஸ்.டி சமூக எஸ்சி, எஸ்டி எம்.பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கிரீமி லேயரை விலக்குவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்தக் கூடாது என்று கூறினர். 

ஆகஸ்ட் 1 அன்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில்,  6-1 என்ற பெரும்பான்மை தீர்ப்பில்,  எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒரே மாதிரியான வகுப்பைக் கொண்டிருக்கவில்லை. இவர்களில் பின்தங்கியவர்களை மாநில அரசுகள் கண்டறிந்து இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.  எஸ்சி, எஸ்டி-ல் உள்ள கிரீமி லேயரை விலக்க 4 நீதிபதிகள் ஆதரவளித்தனர்.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எஸ்சி, எஸ்டிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த சில பரிந்துரைகளை அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது என்று  கூறினார்.


அவர் மேலும் கூறுகையில், அரசமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில், சட்டமேதை அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது.

அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதுவே மத்திய அமைச்சரவையின் முடிவாகும் என்றாா்.

source https://tamil.indianexpress.com/india/centre-turns-down-sc-call-for-sc-st-creamy-layer-exclusion-6845187