சனி, 15 ஆகஸ்ட், 2026

பேரணி நடத்தக் காவல் துறை அனுமதி மறுப்பு

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-slams-tn-govt-denying-bjp-tricolor-rally-permission-coimbatore-12260684

கோவையில் பா.ஜ.க சார்பில் தேசியக் கொடி ஏந்திப் பேரணி நடத்தக் காவல் துறை அனுமதி மறுத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளது. "பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க-வுக்கு அனுமதி இல்லை, ஆனால் த.வெ.க-வுக்கு மட்டும் அனுமதியா?" என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், “கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலா, ஆப்கானிஸ்தானிலா இருக்கிறது? தேசியக் கொடியை ஏந்திப் பேரணி செல்வது பாவச் செயலா?” என்றும் கடுமையான வினாக்களை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். இப்பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து மீண்டும் ஆலோசித்து உடனடியாக உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்வதற்கு அனுமதி கேட்டு பா.ஜ.க தரப்பில் காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, பா.ஜ.க நிர்வாகி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இன்று (14.08.2026) விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, “கோவையின் பிரதான சாலையில் பேரணி நடத்த அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது.  அனுமதி கேட்கப்பட்ட இடம் பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ள பகுதி ஆகும். அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாகக் கூடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட பகுதி அனுமதி வழங்க முடியாத வழித்தடமாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி வழங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்தவொரு காரணமும் இல்லாமல் அனுமதி மறுக்கப்படவில்லை. கட்சி சார்பான ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.  

மாற்று இடத்தில் வேண்டுமானால் அனுமதி வழங்கப்படும். கோவையில் 12 பகுதிகளில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கி அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் ஊர்வலம் செல்லவும், தேசியக் கொடியை ஏந்திச் செல்லவும் அரசு தடுக்கவில்லை” என்று வாதிட்டார். 

இதையடுத்து, நீதிபதி லட்சுமி நாராயணன், “சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை ஏந்திப் போராடி உயிரிழந்தார். அப்படிப்பட்ட இந்திய நாட்டில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லத் தடை விதிப்பது ஏன்?. தேசியக் கொடியை ஏந்தி பேரணியாகச் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்?. 

அமைதியாக தேசியக் கொடியை ஏந்திச் செல்லத்தானே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதால் காவல்துறைக்கு என்ன பிரச்னை?. அவர்களும் இந்தியாவில்தானே வசிக்கிறார்கள். “கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலா, ஆப்கானிஸ்தானிலா இருக்கிறது? தேசியக் கொடியை ஏந்திப் பேரணி செல்வது பாவச் செயலா?” திராவிட கழகத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க-வின் ஊர்வலத்திற்கு அனுமதி கூடாது என்று இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கிறீர்கள். த.வெ.க-வுக்கு மட்டும் அனுமதியா? பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்து கொள்ள மாட்டார்களா?.

அனுமதி வழங்கினால் சட்டம்  - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளதையும் ஏற்க முடியாது. நாட்டின் எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடு சரியல்ல. காவல்துறை நடந்து கொண்ட விதமும் சரியில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகம் செயல்படக்கூடாது. எனவே பேரணி நடைபெறும் இடம் மற்றும் நேரம் தொடர்பாக காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து, அனைவருக்கும் ஏற்ற வகையில் ஒரு நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்”  என உத்தரவிட்டார்.


https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-slams-tn-govt-denying-bjp-tricolor-rally-permission-coimbatore-12260684