செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

சமூக நீதிக்கும் கூட்டாட்சிக்கும் எதிரானது”: சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

 11 08 2026


arunraj assembly

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முன்மொழிந்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முன்மொழிந்தார். நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசியதாவது: “இந்தப் பேரவையில் இன்று விவாதிக்கப்படும் பொருள், ஒரு தேர்வுக் குறையைப் பற்றியது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் சமூகநீதி, மாணவர்களின் எதிர்காலம், கல்வி சமத்துவம், மாநில உரிமை மற்றும் இந்திய கூட்டாட்சித் தத்துவத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சனையாகும்.

மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறைக் கல்வி மட்டுமல்ல. அது மனித உயிர்களைக் காப்பாற்றும் பணிக்கான கல்வியாகும். இந்தக் கல்விக்கான வாய்ப்பு பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.

தமிழ்நாடு பல ஆண்டுகளாக சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மாநிலமாக திகழ்கிறது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்கப்பட்ட காலத்தில், கிராமப்புற ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சிறப்பிடத்தக்க வாய்ப்புகளைப் பெற்றனர்.

அந்தக் கொள்கையின் பலனாகவே இன்று இந்தியாவில் சிறந்த பொது சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகத் திகழ்கிறது. தாய் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டங்கள், அவசர மருத்துவ சேவை, சிக்கலான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

இந்த வெற்றிக்கு அடித்தளம் சமூகநீதி, சமவாய்ப்பு, மாணவர்களின் பன்னிரண்டு ஆண்டு பள்ளிக் கல்விக்கு அளிக்கப்பட்ட மதிப்பு உள்ளிட்ட கொள்கைகள்தான். நீட் அறிமுகமான பிறகு இந்த அடிப்படை சமநிலை சீர்குலைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ஒரு மாணவர் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் கற்ற கல்வியைவிட, ஒரே நாளில் நடைபெறும் ஒரு தேர்வு அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடாது. கல்வியின் உண்மையான நோக்கத்திற்கும், பள்ளிக் கல்வியின் மதிப்பிற்கும் இது முக்கியமான கேள்வியாகும்.

நீட் தேர்வு நடைமுறையில் தனியார் பயிற்சி மையங்கள்தான் அதிகம் பயன்பெறுகின்றன. பல குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் நீட் பயிற்சிக்காக பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பொருளாதார வசதி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர், தினக்கூலி தொழிலாளியின் குழந்தை அல்லது விவசாயியின் குழந்தை அதே அளவிலான பயிற்சியைப் பெற முடியுமா என்பதுதான் தமிழ்நாட்டின் அடிப்படைக் கேள்வியாக உள்ளது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட விரிவான ஆய்வுகளும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிடைத்த நேரடி அனுபவமும் தெளிவாகக் காட்டுவது என்னவென்றால், நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்குப் பதிலாக, அவற்றை மேலும் அதிகரித்துள்ளது. இந்த அரசு எந்த மாணவரின் கனவையும் மறிக்க விரும்பவில்லை. மாறாக, திறமை உள்ள ஒவ்வொரு மாணவரின் கனவும் அவர்களின் பொருளாதாரப் பின்னணி காரணமாக தடைபடக் கூடாது என்பதற்காகவே போராடுகிறது.

நகரங்களில் மட்டும்தான் மருத்துவர்கள் தேவை என்பதில்லை. கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்று, மீண்டும் தங்கள் சமூகத்திற்கே சேவை செய்வதுதான் தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பின் வலிமையான சங்கிலி. அந்தச் சங்கிலி வலுவிழந்துவிடக் கூடாது என்பதே இந்த அரசின் கவலையாகும்.இந்த நீட் பிரச்சினை கல்வியுடன் மட்டுமல்ல கூட்டாட்சியுடனும் தொடர்புடையது. நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் தனித்துவத்தையும், பொறுப்பையும், உரிமையையும் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் வரலாறு, சமூக அமைப்பு, கல்வி முன்னேற்றம் மற்றும் மருத்துவத் தேவைகள் ஆகியவை நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்டவை. எனவே, ஒரே மாதிரியான கொள்கை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.தமிழ்நாடு ஒன்றிய தரநிலைகளுக்கு எதிரானது அல்ல. தமிழ்நாடு வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது அல்ல. தமிழ்நாடு திறமைக்கு எதிரானதும் அல்ல.

ஆனால், அதே நேரத்தில், சமூகநீதியைப் பாதிக்கும், சமவாய்ப்பைக் குறைக்கும், மாநிலங்களின் தனித்துவத்தைப் புறக்கணிக்கும் எந்த ஒரு முயற்சியையும், எந்த ஒரு தீர்வையும் ஏற்க முடியாது என்பதே இந்த அரசின் நிலைப்பாடாகும்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் தகுதி குறைபாடு உள்ள மாணவர்கள் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை.ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால், அதை ஒரு குறைபாடாகக் கருதி, மிகுந்த மன உளைச்சலுடன் வாழும் சூழல் நிலவுகிறது. சிலர் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்ட துயரச் சம்பவங்கள்கூட தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன.இந்த சட்டமன்றம் ஏற்கனவே பலமுறை நீட் விலக்கு கோரிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்கக் கோரி, சட்ட முன்வடிவையும் நிறைவேற்றி அனுப்பியுள்ளது.

அவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் பெருந்திரளான விருப்பத்தைப் பிரதிபலிப்பவை. இந்தப் பேரவையின் ஒருமித்தக் குரலை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும்.மாநிலங்களின் உரிமையை மதிப்பதே கூட்டாட்சியின் அடிப்படை. தமிழ்நாட்டின் சமூகநீதி மரபையும், கல்வி முன்னேற்றத்தையும், மருத்துவ சேவை மாதிரியையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.நீட் தேர்விலிருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2021ஆம் ஆண்டு ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியிருந்தது. ஆனால், மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் அந்தச் சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டுகள், தேர்வின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து நாடு முழுவதும் கேள்விகளை எழுப்பின. தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், தேர்வு முறையை முழுமையாகச் சீர்திருத்துவதற்காக புதிய குழு ஒன்றையும் ஒன்றிய அரசு அமைத்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நிதி ஆயோக்கின் 11 வது ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், நீட் தேர்வு கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்தத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் ஆயுஷ் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டுக்குரிய இடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதைக் கருத்தில் கொண்டு, சமூக நீதி மற்றும் சம வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019, தேசிய இந்திய மருத்துவ முறைகள் ஆணையச் சட்டம், 2020, தேசிய ஹோமியோபதி ஆணையச் சட்டம், 2020 மற்றும் தொடர்புடைய பிற சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, நீட் தேர்வு முறையை ரத்து செய்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

நீட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்பது, மருத்துவக் கல்வி தொடர்பான பொருளை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதுதான். அந்த மாற்றம் செய்யப்படும் வரை, இடைக்காலத் தீர்வாக ஒரு புதிய சிந்தனையை, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, கல்வியாளர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்களின் பரிசீலனைக்காக நமது முதலமைச்சர் அவர்கள் முன்வைத்திருந்தார்.

கல்வி தொடர்பாக மாநிலத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பை வழங்கும் வகையில், சிறப்பு பொதுப் பட்டியல் ஒன்றை உருவாக்கலாம் என்பதுதான் அந்தக் கருத்து. இது தொடர்பாக ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றால், இந்த யோசனை நிச்சயம் நல்ல பலனைத் தரும். இது தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த கோரிக்கை. இது சமூக நீதிக்கான கோரிக்கை. இது அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான கோரிக்கை.

இது ஒவ்வொரு ஏழை, எளிய மாணவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற மனிதநேயக் கோரிக்கை. இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தீர்மானத்தை இப்பேரவையில் முன்மொழிவதில், ஒரு மருத்துவராகவும், குறிப்பாக நீட் தேர்வு எழுதாமல், மாநில சேர்க்கை முறையின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மருத்துவரானவர் என்ற முறையிலும், மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர் என்ற முறையிலும், மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனவே, இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.

நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானத்திர்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வு பயிற்சியை அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்திய அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அதே நேரத்தில், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தும் தனித் தீர்மானத்துக்கு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததைத் தொடர்நந்து, இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-passes-unanimous-resolution-against-neet-exam-minister-arunraj-12250068