வியாழன், 7 ஜனவரி, 2016

விரைவில் ட்விட்டரில் 10,000 எழுத்துக்கள் வரை ட்வீட் செய்யலாம்

விரைவில் ட்விட்டரில் 10,000 எழுத்துக்கள் வரை ட்வீட் செய்யலாம்
சமூக வலைத்தளமான ட்விட்டரில் 10,000 எழுத்துகள் வரையிலான பதிவுகள் இடுவதற்கான வசதி விரைவில்  வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை டிவிட்டரில் 140 எழுத்துக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும்.  தற்போது எழுத்து வரம்பை (Character limit) 10,000 வரை அதிகரிப்பது குறித்து அந்நிறுவனம் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது. 

இந்த புது எழுத்து வரம்பை ட்விட்டர் சோதனை செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தும் தேதி முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.. 

ஏற்கனவே, ட்விட்டரில் இந்த மாற்றம் குறித்த வதந்தி பரவியதால் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 2% சரிந்தது.

ட்விட்டரில் இந்த மாற்றம் ஏற்படுத்துவது அதன் சேவை தரத்தை அதிகரிக்கவும், புதிய பயனாளிகளை ஈர்க்கவும் மட்டுமே என்று கருதப்படுகிறது.

10,000 எழுத்துக்கள் பதிவு செய்யலாம் என்றால், மற்ற சமூக வலைத்தளங்களை போலவே ட்விட்டரிலும் கூட கட்டுரைகள் போன்றவற்றை பதிவு செய்யலாம். இந்த மாற்றத்தால் ட்விட்டர் தனது தனித்துவத்தை இழக்க கூடும்.

எனவே, தற்போது ட்விட்டரில் இருக்கும் டைம்லைனில் எந்த மாற்றமும் ஏற்படாத வகையில் புது எழுத்து வரம்பு இருக்க வேண்டும் என அந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தனித்துவத்தை இழக்காமல் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் முக்கியதுவமாக கருதப்பட்டாலும், தற்போதுள்ள ட்விட்டர் பயனாளிகளிடம் இது எந்த அளவிற்கு வரவேற்பை பெறும் என்பது கேள்வியாகவே உள்ளது.