வியாழன், 28 ஜனவரி, 2016

மின்சாரம் இல்லாமல் வெறும் இயற்கையாக வீசும் காற்றின் உதவியோடும் சொட்டு நீர்


என்னைப் பொறுத்த வரையில் இந்த படம் மிக முக்கியமானது. எனது விவசாய பணியில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். மின்சாரம் இல்லாமல் வெறும் இயற்கையாக வீசும் காற்றின் உதவியோடும் புவியீர்ப்பு விசையின் மூலமும் எனது தோட்டத்தில் (நாங்குநேரி அருகில்) சொட்டு நீர் அமைத்துள்ளோம்.
இந்த படத்தில் கொட்டும் தண்ணீர் வருவது தொலை தூரத்தில் தெரியும் (சுமார் 120 அடி) காற்றாடிக்கு அருகில் உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நெகிழி தொட்டியிலிருந்து வருகிறது. அந்த தொட்டிக்கு காற்றாடி ஆழ்துழாய் கிணற்றிலிருந்து (100 அடி ஆழம்) தண்ணீர் இறைத்துக் கொட்டுகிறது. இது தன்னால் இயற்கையின் சக்தி கொண்டு வருகிறது. எந்த வித மின் மோட்டர்களோ பம்பு செட்டோ இல்லை
பல மாதங்களாக ஆலோசனை செய்து, மாதிரிகள் உருவாக்கி கடைசியில் இம்மாதிரி வடிவமைத்து சொட்டு நீரும் போட்டாகி விட்டது. திருநெல்வேலியில், கடையில் வேண்டியதை வாங்கிக்கொண்டு எல்லாமே நாங்களே போட்டுகொள்கிறோம். கம்பெனிகளையோ ஆலோசகரையோ எதிர் பார்ப்பதில்லை என்பதால் அந்த செலவும் மிச்சம்.
இப்போது எந்த வடிவிலும் எந்த மூலைக்கும் எப்படி வேண்டுமானாலும் தண்ணீரை சிக்கனமாக கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை வந்திருக்கிறது.
இதுதானே வறண்ட பூமியில் விவசாயம் செய்யும் ஒவ்வொருவரது கனவாக இருக்கும் !