இன்றைய நவீன மருத்துவ உலகில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும், உடல் உறுப்புகளை தானம் பெறுவதிலும், அதை வேறு ஒருவருக்கு பொருத்துவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதையும் மறுப்பதற்கில்லை என்றே சொல்லலாம்.
பணம் இருந்தால் எதையும் விலைக்கு வாங்கலாம், உடல் உறுப்புகளைக்கூட ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கி மற்றொருவருக்கு பொருத்தும் அளவிற்கு இது ஒரு வியாபாரமாகவே மாறிவிட்டது.
வசதி படைத்தவர்கள் பணத்தை வீசி உடல் உறுப்புகளை விலைக்கு வாங்குகிறார்கள். இதில், சிறுநீரகம்தான் எளிதில் கிடைக்கிறது. ஏழை, எளிய மக்களிடம் ஆசை வார்த்தைக்கூறி மிகவும் சொற்ப அளவிற்கே பணத்தைக்கொடுத்து சிறுநீரகத்தை வாங்கி விற்கும் அளவிற்கு இடைத்தரகர்களும், அதற்கு உடந்தையாக கடவுளுக்கு இணையாக போற்றப்படும் ஒரு சில மருத்துவர்களும் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை என்பது இதயம், கல்லீரல், கண்விழித்திரை, சிறுநீரகம், தோல் என உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் தானமாக பெறப்பட்டும், முறைகேடாக பணம் கொடுத்து வாங்கியும் மற்றவர்களுக்கு பொருத்துகிறார்கள்.
இந்த உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை என்பது நோயின் தீவிரத்தை பொருத்தோ அல்லது உடனடி தேவைகளின் முன்னுரிமையிலோ செய்யப்படுவதில்லை. இது முழுக்க முழுக்க பணத்தை அடிப்படையாகக்கொண்டே நடைபெறுகிறது.
பெரும்பாலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுவதோடு, முறைகேட்டை மறைத்து அதை வெளி உலகிற்கு விளம்பரப்படுத்தியும் தங்கள் மருத்துவமனையின் சிறப்புகளை தெரியப்படுத்துகிறார்கள்.
ஆன்லைனில் பதிவு
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை என்பது ஏழை, எளிய மக்களுக்கு கானல் நீராகவே உள்ளது. ஆனால், வசதி படைத்தவர்களுக்கு அது உடைகளை மாற்றிக்கொள்வது போல் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க மத்திய சுகாதாரத்துறை ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உடல் மற்றும் அறுவைச் சிகிச்சை அமைப்பான 'நோட்டோ' சிறுநீரகங்களை தானமாகப் பெற்று மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான வெளிப்படையான வரைவு வழிகாட்டும் முறைகளை வெளியிட்டு இருக்கிறது. இதை 'நோட்டோ' வின் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்த வெளிப்படையான வழிகாட்டும் முறைகளை இன்னும் மேம்படுத்தும் விதமாக கருத்துகள் மற்றும் யோசனைகள் பொது மக்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதுபோன்று பெறப்படும் பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் இறந்தவர்கள் மற்றும் உயிரோடு இருப்பவர்களின் சிறுநீரகங்களை தானம் பெறுவது தொடர்பாக இறுதி வழிகாட்டும் முறைகள் முடிவு செய்யப்படும்.
இந்த முடிவுகள் நாட்டில் உறுப்புகள் தானம் செய்வதை ஊக்கப்படுத்துவதாக அமைவதோடு, உடல் உறுப்புகளை தானம் பெற்று அறுவைச் சிகிச்சையில் நடைபெறும் மிகப்பெரிய முறைகேடுகளையும் தடுக்க முடியும்.
இது நடைமுறைக்கு வரும்போது நாடு முழுவதும் சிறுநீரகம் தேவைப்படுவோர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக அமைக்கப்படும் குழுவானது நோயின் தீவிரத்தைப் பொருத்து முன்னுரிமையின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யும்.
1.5 லட்சம் சிறுநீரக தேவை உள்ளது
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி நாட்டில் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை மாற்று அறுவைச் சிகிச்சைக்காக சிறுநீரகங்கள் தேவைப்படுகிறது. ஆனால் 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாகப் பெறப்படுகிறது. சிறுநீரக தேவைகள் என்பது லட்சக்கணக்கில் உள்ளது.
சிறுநீரக தானத்தில் தமிழகம் முன்னோடி
சிறுநீரகம் மட்டுமில்லாது உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் நாட்டிலேயே முன்னோடியாக உள்ளது. உடல் உறுப்பு தானம் குறித்து பொது மக்களிடம் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு தற்போதுதான் இதுபோன்ற வரைவு வழிகாட்டும் முறைகளை செயல்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் மேற்பார்வையில் சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் தானம்பெறப்பட்டு மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது.
மாநில அரசுகளுக்கும் பரிந்துரை
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை குறித்த வெளிப்படையான வரைவு வழிகாட்டும் முறைகள் குறித்து மாநில அரசுகளும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் நோட்டோவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் இனி முறைகேட்டிற்கு வாய்ப்பில்லை... ஏழை, வசதி படைத்தவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை என்பது இனி சாத்தியமே...
இரண்டு வகையான சிறுநீரக தானங்கள்
1. உயிரோடு இருப்பவர்களிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை தானமாகப் பெற்று நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் பொருத்துவது.
2. விபத்து அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று சிறுநீரகங்களை தானமாகப் பெறலாம்.
சவால்கள்
1. சிறுநீரகம் தேவை என்பது அதிக அளவில் உள்ளது. ஆனால் தானம் பெறும் சீறுநீரகங்கள் என்பது மிக, மிக குறைவு.
2. நோயின் தீவிரம், தேவை மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது சிறந்தது.
3. நோயாளியின் சிறுநீரகம் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியாத அளவிற்க பழுதடைந்திருந்தால் அவர்கள் 'டயாலிசிஸ்' செய்வதே சிறந்தது. மாற்று அறுவைச் சிகிச்சை செய்து சிறுநீரகத்தை வீணடிக்க வேண்டாம்.