சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கிரகங்களையும் இந்தியாவில் வசிப்பவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 20-ம் தேதிவரை தொலைநோக்கிகளின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என வான்வெளியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெகு அரிதாக ஏற்படும் இந்த நிகழ்வானது, ஜனவரி 20-ம் தேதியில் இருந்து சூரிய உதயத்துக்கு முன்னதாக வானில் காணப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பனிமூட்டத்தின் காரணமாக இவற்றில் புதன் கிரகம் மட்டும் சற்று மந்தமாக காணப்படும். இவற்றை தெளிவாக காண விரும்புவர்கள் தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம்.
குறிப்பாக, ஜனவரி மாதத்தின் இறுதி நாட்கள் மற்றும் பிப்ரவரியின் முதல் வாரத்தில் சூரிய உதயத்துக்கு முந்தைய முதல் 45 நிமிடங்கள்வரை சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கிரகங்களையும் வானில் அடுத்தடுத்து மிகத்தெளிவாக பார்க்கலாம்.
அவ்வேளைகளில், சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கியவாறு பார்த்தால் வெள்ளி கிரகம் பிரகாசமாக தோற்றமளிக்கும், அதன் இடப்புறமாக கீழ்வாட்டில் புதன் கிரகம் சற்று மங்கலாக தோன்றும்.
மேலும் மூன்று கிரகங்களை காண தலையை உயர்த்தி வான்வெளியை நன்றாக உற்றுநோக்கி ஆராய்ந்தால், வெள்ளியின் வலப்புறமாக மேல்வாட்டில் முதலில் சனிக்கிரகம் தெரியும். அதன் வலதுப்புறத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஒளிஉமிழும் நட்சத்திரமும் காணப்படும். அதன் தெற்கு திசையில் நோக்கினால் செவ்வாய் கிரகத்தை காணலாம். அதன் தென்மேற்கே வியாழனும், தேய்பிறையாக சந்திரனும், பின்னர் உதயமாகும் சூரியனும் காணப்படும்.
பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவும் அரிதாக காணப்படும் இந்த காட்சி, பாதி வானத்தை ஆக்கிரமித்த வகையில் அரைவட்ட வடிவில் காணப்படும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.