புதன், 6 ஜனவரி, 2016

வடகொரியாவில் நிலநடுக்கம்: ‘ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை காரணமா?

nkorea

சியோல்: பேரழிவை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதால் வடகொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா,ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளில் மட்டும் ராணுவ உபயோகத்திற்காக ஹைட்ரஜன் குண்டுகள் இருக்கும் நிலையில், வடகொரியாவின் முதல் ‘ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை வெற்றிகரமாக இன்று(புதன்) நடத்தப்பட்டுள்ளது.இது வடகொரியாவின் அணுசக்தி வளர்ச்சியில் ஒருமுக்கிய படியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
”வடகொரியா ஜனவரி 6-ம் தேதி காலையில் முதல் ‘ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது,” என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
இந்த பரிசோதனை உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த 2006, 2009 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் வடகொரியா இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ள பகுதியில் அணுஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது என்று அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டிலும் 5.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியது.
அணு ஆயுத பரிசோதனை, ஏவுகணை பரிசோதனை விவகாரம் உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள்  தொடர்பாக ஐ.நா. விதித்துள்ள  தடையின் கீழ் வடகொரியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வடகொரியாவின்  அணு பரிசோதனை மையம் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை மையம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நிலநடுக்கத்துக்கு வடகொரிய அணுஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதே காரணம் என்று கடுமையான குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

வடகொரிய மக்கள் இது சாதாரண நிலநடுக்கம்தான் என்று நம்பிவரும் நிலையில், வடகொரியா புதிதாக அணுகுண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என்று தென்கொரியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தென்கொரியாவின் சந்தேகத்தை உறுதிசெய்யும் வகையில் ஜப்பானும், நிலநடுக்கத்துக்கு வடகொரிய அணுஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதே காரணம் என்றும்  கூறியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.