காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சயீத் காலமானார். அவருக்கு வயது 79. உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை கவலைக்கிடமானதை அடுத்து, இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான முப்தி முகமது சயீத், கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி 2-வது முறையாக காஷ்மீர் முதல்வரானார். இதற்கு முன் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2005 வரை காஷ்மீர் முதல்வராக இருந்தார்.
வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது மத்திய உள்துறை அமைச்சராகவும் முப்தி முகமது பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் சட்டசபைத் தேர்தலுக்கு பின் பா.ஜ.க.உடன் கூட்டணி அமைத்து முப்தி முதலமைச்சரானார். அவரது தலைமையில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியன இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. காஷ்மீர் அரசியலில் மிக மூத்த தலைவர்களில் முப்தி முகமது சயீத் ஒருவர் ஆவார்.