2016 ஆம் ஆண்டு சோகமயமான சில விமானப் பயணங்களைக் கடந்து சென்றது. ஒரு சில விமானங்கள் நொறுங்கி விழுந்து பலர் உயிரிழந்தனர். காணாமல் போன விமானங்கள் சிலவற்றில் பயணம் செய்த பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதற்கிடையில் ஒரு விமானம் கடத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானங்கள்

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரேசில் நாட்டு சாப்பகோயன்சி கால்பந்து அணி வீரர்கள் உட்பட 72 பேருடன் சென்ற சிபி2933 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியது. பொலிவியாவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் போதியஎரிபொருள் இல்லாததால், கொலம்பியாவின் மலைப்பகுதியில் மோதி நொறுங்கியது.

இந்த விபத்தைத் தொடர்ந்து அடுத்த மாதத்திலேயே அடுத்தடுத்து 3 விமான விபத்துகள் நிகழ்ந்தன. டிசம்பர் 19 ஆம் தேதி ரஷ்யாவின் ஐஎல்-18 ரக விமானம், விழுந்து நொறுங்கியதில் 25 பயணிகள் மற்றும் 7 விமான பணியாட்கள் உட்பட மொத்தம் 32 பேர் பலியாயினர்.

டிசம்பர் 25 ஆம் தேதி 83 பயணிகள், 8 விமான படை வீரர்களுடன் சென்ற ரஷ்யாவின் டியு - 152 ரக விமானம் சிரியாவின் லடாகியா என்ற நகருக்கு மேல் பறக்கும் போது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. பின்னர் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 91 பேரும் உயிரிழந்தனர்.
காணாமல் போனவை

கடந்த ஜூலை 22-ம் தேதி சென்னையில் இருந்து போர்ட்பிளேயருக்கு சென்ற ஏஎன்32 விமானம் வழியில் காணாமல் போனது. அந்த விமானத்தில் மொத்தம் 29 பேர் பயணம் செய்தனர். சென்னைக்கு கிழக்கே 151 நாட்டிக்கல் மைல் தொலைவில் (300 கி.மீ) 23 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென காணாமல் போனது. இந்த விமானப்படை விமானம் குறித்து தகவல் எதுவும் இல்லை.
கடத்தப்பட்ட விமானம்

டிசம்பர் 23 ஆம் தேதி லிபியாவைச் சேர்ந்த அப்ரிகியாஸ் ஏர்பஸ் ஏ320 விமானத்தை 118 பயணிகளுடன் தீவிரவாதிகள் கடத்தினர். அவர்கள் அந்த விமானத்தை மால்டா நாட்டிற்கு திசை திருப்பி தரையிறங்கச் செய்ததாக தகவல் வெளியானது. பின்னர் விமானத்தைத் தேடும் பணி நடந்தது. லிபியாவிலிருந்து 500 கிமீ தொலைவில் உள்ள சிறிய தீவான மால்டாவில் விமானம் இருப்பதற்கான சிக்னல் கிடைத்ததாக விமானத்தைத் தேடும் குழுவினர் தெரிவித்துள்ளனர். விமானத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
பதிவு செய்த நாள் : December 28, 2016 - 03:57 PM