புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது குடிபோதையில் வாகனங்களை ஒட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈவ் டீசிங் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதற்கும், இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : December 29, 2016 - 08:29 AM