சமூக வலைதளங்களின் அபார வளர்ச்சி மக்களிடம் விரைவில் செய்தியைக் கொண்டு சேர்ப்பது போலவே, வதந்திகளையும் பரப்பி ஒருவித பதற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி விடுவதுண்டு.
வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய இதுபோன்ற வதந்திகளுக்கு உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ முதல் ரிசர்வ் வங்கி வரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த சம்பவம் 2016ல் கண்கூடு. சமூக வலைதளம் மற்றும் தொலைதொடர்பு நிறுவங்களின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில், 160 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் சமூக வலைதளத்தினை தினசரி பயன்படுத்துகின்றனர். இதேபோல பேஸ்புக்கில் 148 மில்லியம் பேரும், ட்விட்டரில் 22 மில்லியன் பேரும் ஆக்டிவ் யூசர்களாக இருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
2016ம் ஆண்டில் மக்களை சுற்றலில் விட்ட டாப் 5 வதந்திகள்...
உலகின் சிறந்த பிரதமராக மோடியை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது என்பதுதான் 2016ன் டாப் ஒன் வதந்தி.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளில் அடிக்கடி அடிபடும் பெயர் யுனெஸ்கோ. 2016 ஜூனில் இந்திய பிரதமர் மோடியை உலகின் சிறந்த பிரதமராகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியதாக ஒரு செய்தி வாட்ஸ் அப் குரூப்களில் படு வேகமாகப் பரவியது. இந்த தகவலை யுனெஸ்கோ மறுத்தும், அந்த செய்தி இன்னமும் சில சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் சிப்:
பணம் மதிப்பிழப்பு விவகாரத்துக்குப் பின் மத்திய அரசு வெளியிட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் நானோ சிப் பொருத்தப்பட்டிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவியது. கருப்புப் பணம் பதுக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறப்பட்டது. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்றும் மக்களைக் குழப்புவதற்காகப் பரப்பப்பட்ட வதந்தி என்றும் மத்திய அரசு பின்னர் விளக்கமளித்தது.
பத்துரூபாய் நாணயங்கள் செல்லாது:
பணம் மதிப்பிழப்பு விவகாரத்தை அடுத்து நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள பத்து ரூபாய் நாணயங்களையும் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டதாக வாட்ஸ் அப் முதல் பேஸ்புக் வரை ஒரு தகவல் வைரலானது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த பிரச்னை நெல்லை மாவட்டம் முதல் கோவை மாவட்டத்தில் சிலபகுதிகள் வரை எதிரொலித்தது. பத்து ரூபாய் நாணயங்களைத் திரும்பப் பெறுவதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கமளித்தது.
உப்பு பற்றாக்குறை:
ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த நவம்பர் 8ம் தேதியை அடுத்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் கடும் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி தீயாய் பரவியது. இதனால், நாட்டின் பலபகுதிகளில் ஒரு கிலோ உப்பு ரூ.200 வரை விலை போனது. வடமாநிலங்களின் சில பகுதிகளில் உப்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடைகளை மக்கள் சூறையாடினர். இதையடுத்து உடனடியாகத் தலையிட்ட மத்திய அரசு நாட்டின் எந்த பகுதியிலும் உப்பு தட்டுப்பாடு இல்லை என்று விளக்கமளித்தது.
வாட்ஸ் அப் புரபைல் பிக்சர்:
வாட்ஸ் அப்பில் மிகவும் தீவிரமாகப் பரவிய வதந்திகளில் இதுவும் ஒன்று. வாட்ஸ் அப் புரபைல் பிக்சராக உங்கள் புகைப்படங்களை வைக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால் அதனை உடனடியாக மாற்றி விடுங்கள். ஏனென்றால் உங்கள் புரபைல் பிக்சர்களை ஐஎஸ் தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்ற தொனியில் அந்த எச்சரிக்கை செய்தி ஒவ்வொரு குரூப்புக்கும் பார்வேர்டு செய்யப்பட்டது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது.