ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை தெளிவுப்படுத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவிற்கு முழுமையான உயர் சிகிச்சை அளிக்கப்பட்டதாவும், அவரது மரணத்தில் மர்மம் இல்லை எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி வாதிட்டார். மேலும் ஏற்கனவே இது தொடர்பாக தொடரப்பட்ட 2 வழக்குகளை தள்ளுபடி செய்ததுப் போல் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரினார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி வைத்தியநாதன், தான் நீதிபதி என்பதைத் தாண்டி, ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் தனக்கே ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மத்திய அரசு முழுமையாக தகவல்களை வெளியிடவில்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வேறு ஏதேனும் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தால் கோட்டாட்சியர் விசாரணை ஏன் நடத்தவில்லை என கேள்வி எழுப்புவது மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் அவரது உடலை தோண்டி எடுத்து பரிசோதிக்கவும் உத்தரவிடுவேன் என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மக்களுக்கு எழும் சந்தேககங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அரசுகளுக்கு இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மத்திய அரசு வழக்கறிஞர் மதனகோபாலராவ், பதில் அளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என கூறி விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தனர்.
December 29, 2016 - 11:45 AM