உத்தரப்பிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியில் மிகப்பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது மகனும் மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.
அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே, முதலமைச்சர் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என சில அறிவுரைகளை ஊடகங்கள் வாயிலாக முலாயம் சிங் யாதவ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது தொடங்கிய பிரச்சனை தற்போது மிகப்பெரும் பிளவாக வெடித்துள்ளது. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு அகிலேஷ் யாதவின் ஆதரவாளர் ராம்கோபால் யாதவ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த முலாயம் சிங் யாதவ், தனது மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளரும் உறவினருமான ராம் கோபால் யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார்.
இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்றும், கட்சியை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் முலாயம் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்ட கட்சித் தலைவரான தனக்கே அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் பதவி காலம் முடிய இன்னும் 3 மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.