பிரதமர் மோடியின் ரூபாய் ரத்து அறிவிப்பு என்பது மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க போட்ட திட்டம், ஒழுக்கமற்ற செயல்.
கடந்த 1975-77 ம் ஆண்டுகளில் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலையைப் போன்றது என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை விமர்சித்துள்ளது.
போர்ப்ஸ், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வணிகம் தொடர்பான பிரபல வார பத்திரிகை ஆகும். இந்தப் பத்திரிகை இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகை ஆசிரியர் ஸ்டீவ் போர்ப்ஸ் அந்தப் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரை விவரம்:
இந்திய அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ரத்து செய்து, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததோடு மட்டும் அல்லாமல், ஏற்கனவே ஏழைகளாக இருக்கின்ற, லட்சக் கணக்கான மக்களையும் கொடிய வறுமையில் தள்ளியுள்ளது. இந்த நடவடிக்கை அந்த அப்பாவி மக்களை மூச்சடைக்கவைத்து, திக்குமுக்காடச் செய்யும் ஒழுக்கமற்ற செயல்.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு மூலம் இந்திய அரசு, தன் நாட்டு மக்களின் சொத்துகளை அபகரிக்கும் பொருட்டு மிகப்பெரிய திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளது.
நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது என்பதற்காக, அவசரநிலை காலத்தில் இந்திரா ஆட்சிக்காலத்தில் கட்டாய கருத்தடை திட்டம் கொண்டு வந்து, இயற்கைக்கு மாறாக ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டார்கள். அத்திட்டத்துக்குச் சமமாக மோடி அரசின் ரூபாய் நோட்டு ரத்து திட்டம் இருக்கிறது.
இந்தத் திட்டம் ஊழலையும், வரிஏய்ப்பையும், கள்ள நோட்டை ஒழிக்கும் என்றும் , பயங்கரவாதச் செயல்களுக்கு நிதிசெல்வதை குறைக்கும் என்றும் இந்திய அரசு கூறுகிறது;
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என்றும் மக்களை வலியுறுத்துகிறது. ஒரு நாட்டை பணத்தின் மீதே பற்றில்லாமல் செய்து, அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வர நினைக்கும் ஒரு அரசின் உச்சபட்ச, அழிவுக்குரிய உதாராணம் இந்தியா தான்.
கொஞ்சம் கூட நியாயமே இல்லாமல் நடந்து கொண்ட இந்தியாவைப் பார்த்து மேலும் சில நாடுகள் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்க தயாராகின்றன. நாட்டு மக்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி தலையிடுவதும், தனிமனிதர்களின் வாழ்க்கையை அரசு ஆதிக்கம் செய்ய அதிகாரத்தை திணிப்பதும்தான் இந்த நடவடிக்கை என்ற உண்மையான புரிதல் யாருக்கும் இல்லை.
இந்தியாவின் பொருளாதாரம் என்பது ரொக்கப் பணப்பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. நாட்டின் கடுமையான வரிகள், கெடுபிடிகளால் தான் பெரும்பாலும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடக்கின்றன.
ரூபாய் நோட்டை ஒழிப்பதனால் மட்டும் எல்லாம் மாறிவிடாது. இந்த உலகம் தொடங்கியதில் இருந்தே மனிதனின் சில குணங்கள் மாறாமலே உள்ளன. தப்பு செய்வதற்கு புதிய வழிகளை மனிதர்கள் கண்டு அறிந்துகொண்டே இருப்பார்கள். ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதால் மட்டும் பயங்கரவாதிகள் திருந்தி விடப்போவது இல்லை. \
ஏழைமக்கள் அதிகம் வாழும் இந்தியாவில், பணம் இல்லா பொருளாதாரம் என்பது உடனடியாக சாத்தியம் இல்லை. வரிவிதிப்பு முறைகளை ஒரே சீராக்கி, அல்லது அனைத்து தரப்பினரும் வரிசெலுத்தும் வகையி்ல் குறைந்தவரி விதிப்பு செய்து, வரி ஏய்ப்பை தடுக்கலாம். வர்த்தகம், தொழில் செய்வதை எளிதாக்கினாலே, மக்கள் அவர்களாகவே பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறிவிடுகிறார்கள்.
உலகின் மிகப்பெரும் சக்தியாக மாறவேண்டும் என்ற ஆசை முழுமையாக நிறைவேற வேண்டுமென்றால் இந்தியா கண்டிப்பாக சில விஷயங்களை செய்யவேண்டியது இருக்கிறது.
வர்த்தகத்திற்கான வரிகளையும், அரசின் வருவாயைக் குறைத்து, ஒட்டுமொத்த வரிமுறையையும் எளிமைப்படுத்த வேண்டும். சுவிட்சர்லாந்தின் நாணயத்தை விடவும் வலிமையானதாக ரூபாயை மாற்றவேண்டும். அடிப்படை கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதெல்லாம் நடக்கும்போது இந்தியா உலகின் மிகப்பெரும் சக்தியாக மாறும்.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.