புத்தாண்டை வரவேற்கும் ஆவலுடன் வருடத்தின் கடைசி தருணத்தில் அனைவரும் உள்ளோம். ஆனால் 2017-ஆம் ஆண்டு வழக்கத்தை விட ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2017-ஆம் ஆண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க உள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை கொண்டு வானியல் நேரம் கணக்கிடபடுகிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் துல்லியமாக நேரம் கணக்கிடப்படுகிறது.
நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி சுழற்சி தாமதமாகி இருக்கலாம் என சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (IERS) அறிவித்துள்ளது. புவி சுழற்சி தாமதம் காரணமாக 500 முதல் 750 நாட்கள் வரை வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையில் ஒரு விநாடி வேறுபாடு எற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை ஈடுசெய்ய உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11 மணி 59- வது நிமிடம், 59- வது நொடிக்குப் பிறகு செயற்கையாக ஒரு ‘லீப்’ நொடி சேர்க்கப்படும். இது, வானியல் கடிகாரத்துக்கும், உலக கடிகாரத்துக்கும் இடையே ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.
லீப் விநாடி முறையானது 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உலகில் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 27-வது முறையாக இந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படவுள்ளது. எனவே எதிர்வரும் 2017 புத்தாண்டு பிறப்பதற்கு கூடுதலாக ஒரு விநாடி எடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
பதிவு செய்த நாள் : December 31, 2016 - 09:14 AM