எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் வகித்த பொறுப்பு அதிமுக பொதுச்செயலாளர் பதவி. அந்த இடத்திற்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இந்த நேரத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பு கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்..
1972-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து பிரிந்த மறைந்த முதலமைச்சர் எம்ஜி ராமச்சந்திரன் தலைமையில் உருவானது அதிமுக. கட்சி தொடங்கிய இரண்டே மாதத்தில் பத்து லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். 1974-ஆம் ஆண்டு முதல் அகில இந்திய அண்ணா திமுகவாக கட்சி உருவெடுத்தது.
கட்சித்தொடங்கியது முதல் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை பொதுச்செயலாளர் பதவி என்பது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாக இருந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக எம்ஜிஆரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவரே முதல்வராகவும் இருந்தார். 1987-ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவைத்தொடர்ந்து அஇஅதிமுக இரண்டாக உடைந்தது. ஒரு அணிக்கு எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைவராகவும், மற்றொரு அணிக்கு ஜெயலலிதா தலைவராகவும் இருந்தனர். இதனைத்தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன. அப்போது முதல், ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்டு கட்சி நடத்தப்பட்டு வந்தது.
கட்சி விதிமுறைகளின்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கடைசியில் பொதுக்குழுவை கூட்டுவதை அஇஅதிமுகவில் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது போட்டியின்றி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். எம்ஜிஆரின் மறைவின்போது மட்டும் நாவலர் நெடுஞ்செழியன் சிறிது காலம் பொறுப்பு பொதுச்செயலாளராக பணியாற்றி உள்ளார்.
அதிமுக இரண்டாக உடைந்தபோது, அஇஅதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. மேலும், ஜானகி தலைமையிலான அணியினர் இரட்டைப்புறா சின்னத்திலும், ஜெயலலிதா தலைமையிலான அணியினர் சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். பின்னர் ஜெயலலிதா தலைமையில் கட்சி ஒன்றிணைந்தது. அதன் பின்னர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளராக இறுதிவரை இருந்தார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து சசிகலா தற்போது போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அஇஅதிமுகவில் பொதுச்செயலாளராக போட்டியிட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்சியில் இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்த முறை, பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்பதற்கு மட்டுமே பொருந்தும். பொதுக்குழுவில் ஒருமனதாக அனைவரும் இணைந்து பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்காத ஒருவரை தாமாக முன்வந்து தேர்ந்தெடுப்பதால் எவ்வித சிக்கலும் இல்லை. இதன் அடிப்படையிலேயே தற்போது சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பதிவு செய்த நாள் : December 29, 2016 - 08:24 PM