ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய சிரியா யுத்தம். 2016-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
கான்ஸ்டான்டிநோபிள், கெய்ரோ ஆகியவற்றைப் போல பழம்பெருமை கொண்ட நகரம் அலெப்போ. நவீன கால சிரியாவின் மிகப்பெரிய நகரம். 2016-ஆம் ஆண்டில் மிகப்பெரிய போர்க்களமாக மாறியிருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரைக் கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் சின்னாபின்னமாகியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் இந்த நகரின் மக்கள்தொகை வெறும் மூன்று லட்சமாகக் குறைந்துள்ளது. ரஷ்யப் படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்களை அலெப்போ நகரை விட்டு விரட்டும் பணியை சிரியா ராணுவம் பிப்ரவரி மாதத்தில் மேற்கொண்டது. அலெப்போவின் கிழக்குப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்த பொதுமக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி இரு முக்கியப் பகுதிகளை சிரிய ராணுவம் கைப்பற்றியது.
ஜூலை மாதத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், கிழக்கு அலெப்போ நகரில் சிக்கியிருந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் கொண்டு செல்லப் பயன்பட்ட சாலையை சிரிய ராணுவம் அடைத்தது. இதைத் தொடர்ந்து தாக்குதல் தீவிரமடைந்தது. ரஷ்ய விமானங்களும், சிரியாவின் ராணுவமும் வீசிய குண்டுகள் ஏராளமான கிளர்ச்சியாளர்களுடன் சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என யாரையும் இந்த யுத்தம் விட்டுவைக்கவில்லை. நவம்பர் மாதத்தில் ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அலெப்போ நகரில் மட்டும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரஷ்ய விமானங்களும் சிரிய ராணுவமும் நடத்திய தாக்குதல்களில் 90 குழந்தைகள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும் பொதுமக்கள் வதைக்கப்பட்டனர். சித்திரவதை செய்வதற்கும் தனிமையில் அடைத்து வைப்பதற்கும் பல சிறைகளை கிளர்ச்சியாளர்கள் அமைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.அலெப்போ நகரைப் போலவே பிற பகுதிகளிலும் இந்த ஆண்டு போர்கள் நடந்தன. ஒரு புறம் அமெரிக்கா, துருக்கி, சவுதி அரேபியா போன்ற நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம், ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சிரியாவின் அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தின.
ஐ.எஸ். பயங்கரவாதிகளும், குர்து ஆயுதக் குழுவினரும் தனித்தனியாகத் சண்டையிட்டனர். இதில் யாருக்கும் உடனடி வெற்றி கிடைப்பதற்கான அறிகுறிகள் 2016-ஆம் ஆண்டில் தென்படவில்லை. அப்படியே யாரேனும் வெற்றிபெற்றால்கூட, அப்பாவிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட பூமியின்மீதுதான் அதைக் கொண்டாட முடியும்.
December 30, 2016 - 06:40 PM