சனி, 31 டிசம்பர், 2016

இந்தியா வெட்கம் கெட்ட நாடு!’ இயக்குநர் பா.இரஞ்சித்


மதுரை : “இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாச்சாரத்தில் சிறந்தது, பண்பாட்டில் சிறந்தது என எல்லோரும் பெருமையாக சொல்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்,” என இயக்குநர் பா.இரஞ்சித் பேசியுள்ளார்.
மதுரையில் மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கை ஆதித்தமிழர் கட்சி நடத்தியது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசுகையில், “இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாச்சாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என எல்லோரும் பெருமையாக பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்.
இது நாகரீகமற்ற நாடு. மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்.? அரசாங்கம் தானே நம்மை இழிவான வேலையை செய்ய சொல்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி, இறந்து போயிருக்கிறார்கள். அதில் எத்தனை இளைஞர்கள் அவர்களின் கனவுகள் அழிந்து போனது. இந்த நிலை தொடர வேண்டுமா?
இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கிறது. மனிதக்கழிவை அகற்றுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை அரசே அமல்படுத்த மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். வேறு யாராவது பேசுகிறார்களா? தனித்தொகுதியில் வெற்றி பெற்று சென்றவர்கள் யாராவது இதைப்பற்றி பேசினார்களா? இதை யாரும் பேச மாட்டார்கள்.
உணவுக்காகத்தானே இந்த வேலையை செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம்.  ஆம், இந்த வேலையை செய்ய மாட்டோமென்று எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும்.  ஒரு கல்யாணம், திருவிழா என்றால் சாதியாக ஒன்றாக சேருகிறீர்கள்.
ஆனால் இந்த இழிவான வேலையை செய்ய மாட்டோமென்று சொல்ல ஏன் ஒன்றாக திரள மறுக்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே அறிவற்றவர்களாக அடிமைகளாக இருக்க போகிறீர்கள். இங்கு நீதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக நினைக்கும் நாடு. இங்கு நீதி கிடைக்காது.
நாம் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும். நீங்க இந்த வேலையை  மறுக்க ஏன் அஞ்சுகிறீர்கள், அடிப்பார்கள் என்றா? அடித்தாலும் பரவாயில்லை. அடி வாங்குங்கள் ஆனால், இந்த வேலையை  மட்டும் செய்யாதீர்கள்.  நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய இடையிலுள்ள தடை கற்களை உடைக்க வேண்டும் என்று அம்பேத்கார் சொன்னார். ஒவ்வொரு முறையும் நம்மை காப்பாற்ற இயேசு வருவார், அம்பேத்கார் வருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் பசிக்கு எப்படி நாம் உணவு சாப்பிடுகிறோமோ, அதுபோல் நம்மீதான இழிவுகளை களைய நாம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த வேலையை விட்டு செல்ல வேண்டாம். இவை இன்றோடு போகட்டும். மகிழ்ச்சி”. என்றார்.
இந்த நிகழ்வில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், கிறிஸ்துதாஸ்காந்தி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
source: kaalaimalar