பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 50 நாட்களுக்குப் பின்னரும் இதே நிலை நீடித்தால் மோடி பதவி விலகுவாரா என காட்டமாக கேள்வி எழுப்பினார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது இந்த கூட்டத்தில் இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரீயஜனதா தளம், திமுக ஆகிய கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் சில கட்சி தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மம்தாவும்,ராகுல் காந்தியும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தவித பலனும் ஏற்படவில்லை என ராகுல் குற்றம் சாட்டினார். ஏழை எளிய மக்களின் 2 மாத பிரச்சனை தீரவில்லை என்றும் தெரிவித்தார். கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டது, யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை பாஜக தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய மம்தா கூட்டாட்சித் தத்துவத்திற்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். சுதந்திரத்துக்கும் பின்னர் இது மிகப்பெரிய ஊழல் என்றும், 50 நாட்களுக்கும் பின்னும் இதே நிலை நீடித்தால் பிரதமர் ராஜினாமா செய்வாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாள்தோறும் ஏழை மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர் என்றும் தெரிவித்த மம்தா, ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த உண்மையான விபரத்தை மோடி மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
source: Kaalaimalar