புதன், 28 டிசம்பர், 2016

ராமமோகன ராவின் வீட்டில் எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது?.... வருமான வரித்துறை விளக்கம்

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகராவின் வீட்டில் எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது வீடுகளில் மத்திய ரிசர்வ் படை போலீசாரின் பாதுகாப்போடு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனும் எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தார். இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ராமமோகன ராவ், தலைமைச் செயலாளர் அறையில் சோதனை நடத்தியது அரசியல் சாசன விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசின் மீது முன்வைத்தார்.
ராமமோகன ராவின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர், அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ராமமோகன ராவின் வீட்டில் வருமானவரித்துறை சட்டப் பிரிவு 132ன் படியே சோதனை நடத்தப்பட்டது. இந்த சட்டப்பிரிவின் கீழ் சோதனையின் போது மத்திய/மாநில போலீசாரின் பாதுகாப்பைப் பெற முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள ராமமோகன ராவின் அலுவலகத்தில் சோதனையானது பணியாளர் நலத்துறை செயலர் சிவ்தாஸ் மீனாவிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்பட்டது என்றும், அங்கு வைக்கப்பட்டிருந்த ராமமோகன ராவின் செல்போன்களை எடுக்கவே சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.