தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை வங்கிகள் மூலம் தருவதைக் கட்டாயமாக்கும் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
புதிய சம்பள திருத்தச் சட்டம் 2016- ரூ.18 ஆயிரம் வரையில் சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளத்தை காசோலை மூலம் அல்லது அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் வழங்க வகை செய்கிறது. இந்தச் சட்டத்தின் படி ஊதியத்தை வங்கிகள் மூலம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. முந்தைய சம்பளச் சட்டம் 1936ன் படி சம்பளப் பணத்தை வங்கிகள் மூலம் வழங்குவதற்கு முன் ஊழியர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் ஊழியர்களிடம் முன் அனுமதி பெற அவசியமில்லை எனும் இந்தப் புதிய சட்ட மசோதாவை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த 15ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
ஆனால் பணத் தட்டுப்பாடு பிரச்சனை காரணமாக நாடாளுமன்றத்தில் நிலவிய அமளியால், மசோதா நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது அமலுக்கு வரும் இந்த மசோதா 6 மாதத்திற்கு செல்லுபடியாகும். அதற்குள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.
பதிவு செய்த நாள் : December 29, 2016 - 11:56 AM