மதிப்பிழக்கச் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையாக நாடெங்கும் உள்ள 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை, செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக வங்கிக்கணக்குகளில் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை செலுத்துவது குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் வரும் 30-ஆம் தேதிக்குள் 5,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒருமுறை மட்டுமே வங்கிகளில் செலுத்த முடியும். அதற்கும், இதுவரை அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தப்படாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். 5 ஆயிரம் ருபாய் வரையிலான தொகையை, டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் தமது வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
December 20, 2016 - 07:28 AM