செவ்வாய், 13 டிசம்பர், 2016

இதுவரை தமிழகத்தை உலுக்கிய புயல்கள் ஒரு பார்வை...!

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது. அப்படி இருக்க 1994-ஆம் ஆண்டில் பெயர் வைக்கவில்லையே தவிர தற்போது சென்னையைத் தாக்கிய வர்தாவைப் போன்ற அதிதீவிரப் புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது.
1994- அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த அந்தப் புயல், சென்னை - கடலூர் இடையே 115 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பிறகும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
அடுத்து கடந்த 2010-ஆம் ஆண்டில் உருவான ஜல் புயல், சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
ஆனால் அடுத்த ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது கூட முழுமையாக சீரடையவில்லை.
2011-ல் டிசம்பர் 30-ல் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே அந்த தானே புயல் கரையைக் கடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. இதில் தமிழகத்தில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வீணாகின.
2012-ஆம் ஆண்டில் உருவான நீலம் புயல் அக்டோபர் 31-ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. கரையைக் கடந்தபோது சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தி‌ல் காற்று வீசியது. புயலால் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிதீவிரப் புயலான “வர்தா” சென்னையை தாக்கியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Posts: